
பாகூர்: புதுச்சேரி கடற்கரை மணலில் பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்து கொலை செய்து, நாடகமாடிய போதை தாயை போலீசார் கைது செய்தனர். சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (32). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் சாலையோரங்களில் வசிப்பவர்கள். இவர்களுக்கு ஏற்கனவே 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மற்றொருவரின் மனைவியான சங்கீதா (26) என்பவரை குமரேசன் 2வதாக திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமானார். இதையடுத்து குமரேசன், சங்கீதாவை அழைத்துக் கொண்டு புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் குளக்கரை அருகே தங்கியிருந்தார். பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
8 மாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவுக்கு, கடந்த மாதம் பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பபிதா என்று பெயர் சூட்டியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள், குழந்தையை அருகில் படுக்க வைத்து விட்டு தூங்கியுள்ளனர். நேற்று காலை கண்விழித்தபோது குழந்தையை காணாதது கண்டு திடுக்கிட்டனர். பல்வேறு இடங்களிலும் தேடினர். இதற்கிடையே நேற்று காலை, புதுக்குப்பம் கடற்கரை மணல் பகுதியில் (மூர்த்திகுப்பம் சுடுகாடு அருகே) பச்சிளம் குழந்தை ஒன்று புதைக்கப்பட்டு, கை கால்கள் வெளியே தெரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவ்வழியே சென்றவர்கள், கிருமாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதுபற்றி தகவலறிந்த குமரேசன், சங்கீதா தம்பதியினர் அங்கு வந்தனர். அப்போது, மணலில் புதைக்கப்பட்டு இருந்தது அவர்களது குழந்தை தான் என தெரியவந்தது. குழந்தையின் சடலத்தை பார்த்து இருவரும் கதறி அழுதனர். போலீசார் நடத்திய விசாரணையில், தாயே குழந்தையை கொன்று நாடகமாடியது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘குழந்தை பிறப்பு குறித்து குமரேசன் சந்தேகம் எழுப்பி, அடிக்கடி சங்கீதாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போதும் அவர், குழந்தை தனக்கு பிறக்கவில்லை, யாருக்கு பிறந்தது? என கேட்டுள்ளார்.
இதனால் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, குமரேசன் படுத்து தூங்கி விட்டார். ஆனால், கணவர் சந்தேகப்பட்டு அடிக்கடி குழந்தையின் பிறப்பு குறித்து கேட்டதால் ஆத்திரமடைந்த சங்கீதா, குழந்தையை எடுத்துச் சென்று, மணலில் உயிரோடு புதைத்து கொன்றது தெரியவந்தது. இருப்பினும் அவர், கொலை செய்ததை வெளியே சொல்லாமல் நாடகமாடி வந்துள்ளார். போலீசாரின் அதிரடி விசாரணைக்குப்பிறகே உண்மையை கக்கியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர்.
The post புதுச்சேரி கடற்கரையில் பயங்கரம் குழந்தை உயிரோடு மணலில் புதைத்து கொலை: நாடகமாடிய போதை தாய் கைது appeared first on Dinakaran.
