×

அழகர்கோவில் மலையில் காட்டெருமைகள் உலா: பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

அழகர்கோவில், ஏப். 16: அழகர்கோவில் மலைப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் காட்டெருமைகள் தற்போது சுற்றி வருகின்றன. மலைப்பகுதிக்கு செல்லும் பக்தர்கள், அவற்றின் அருகில் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைப்பகுதி இயற்கை எழில் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியாக அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் குரங்கு, முயல், கீரிபிள்ளை, வவ்வால், குருவிகள், மற்றும் காட்டெருமைகள் வசிக்கின்றன. பகல் நேரங்களில், காட்டெருமைகள் உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் கூட்டமாகவோ, தனியாகவோ மலையில் இருந்து இறங்கி வருவது வழக்கம். இதன்படி மலை மீதுள்ள நூபுர கங்கைக்கு ஊற்றுநீர் பெருகிவரும் சிற்றோடையில் காட்டெருமைகள் அடிக்கடி வந்து தண்ணீர் பருகி செல்கின்றன.

இந்நிலையில், தற்போது மலைப்பகுதியில் வெயில் காரணமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி நூபுர கங்கை, சோலைமலை முருகன் கோயில் மற்றும் அழகர்மலை அடிவார பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றை ஆர்வமுடன் பார்த்து ரசிக்கும் பக்தர்கள் பலரும், அவற்றை செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர். இருப்பினும், காட்டெருமைகள் திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அவற்றின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

The post அழகர்கோவில் மலையில் காட்டெருமைகள் உலா: பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Alagharkoil Hill ,Forest Department ,Alagarkoil ,Alagharkoil hills ,Dinakaran ,
× RELATED காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்