×

மின்சாரம் தாக்கி பெண் பலி கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

நீடாமங்கலம், ஏப். 16: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்குச் சொந்தமான வயல் நீடாமங்கலம் வட்டம் நகர் கிராமத்தில் உள்ளது.இவரது வயலில் வலங்கைமான் வட்டம் எருமைப்படுகை கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் மனைவி மீனா (30) என்பவர் களையெடுக்கும் பணியில் நேற்று முன் தினம் காலை ஈடுபட்டார். அப்போது காலை 11 மணிக்கு அருகில் உள்ள மின் மோட்டாரில் தண்ணீர் பிடிப்பதற்காக குடத்துடன் சென்ற மீனா அறுந்து கிடந்த மின் வயரை காலில் மிதித்தார். இதனால் மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில்சம்பவ இடத்திலேயே மீனா பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசினர் மரு்த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் நீடாமங்கலம் பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் வலங்கைமான் செந்தில்குமார், நீடாமங்கலம் பாலசுப்பிரமணியன், முத்துப்பேட்டை உமேஸ்பாபு தலைமையில் திடீர் சாலை மறியல் செய்தனர். சாலை மறியலில் இறந்த மீனா கணவர் விஜயகாந்த், மகள்கள் வீமகாஸ்ரீ, யாசிகா உள்ளிட்ட, ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். நீடாமங்கலம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post மின்சாரம் தாக்கி பெண் பலி கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Needamangalam ,Sundaramurthy ,Ammapet, Thanjavur district ,Needamangalam Vattam Nagar ,Dinakaran ,
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...