பொன்னமராவதி,ஏப்.16: பொன்னமராதி பகுதியில் ரூ.1.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார். பொன்னமராவதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார். தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார். இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி, ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், ஊராட்சி தலைவர் கீதாசோலையப்பன் ஆகியோர் பேசினர். இதனைத்தொடர்ந்து தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெஜெநகரில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 57 பேருக்கும் விலையில்லா வீட்டுமனைபட்டா 5 பேருக்கு பட்டாமாறுதல், 7 பேருக்கு பட்டாமாறுதல் உட்பிரிவி, 31 பேருக்கு புதிய குடும்பஅட்டை என ரூ.1.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்ட அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: நீர் நிலை உள்ளிட்ட புறம்போக்கை பெரும் வசதி படைத்த ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எடுத்து ஏழை எளியோருக்கு பட்டா வழங்க வேண்டும். அப்போது தான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது நிரூபணம் ஆகும். பொன்னமராவதி பகுதியில் 65 ஏக்கர் புறம்போக்கு இடம் இருப்பதாக வருவாய்த்துறையினர் கூறினர். இன்னும் 40 ஏக்கர் எடுத்து ஒரு தொழிற்சாலை உருவாக்கப்படும் தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெஜெநகர் பகுதியில் மீதமுள்ள குடியிருப்போருக்கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதே போல இந்திராநகர் பகுதிக்கும் பட்டா வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெள்ளைச்சாமி, துணை தாசில்தார் சேகர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகர செயலாளர் அழகப்பன், பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் வேளாங்கண்ணி, விஏஓக்கள் ராஜேஸ்வரி, பாண்டியன், ரமேஷ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பொன்னமராவதி பகுதியில் ரூ.1.34 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கினார் appeared first on Dinakaran.
