×

கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தும் தேதி அறிவிப்பு

பள்ளிபாளையம், ஏப்.16: விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, 18ம்தேதி நடைபெறுகிறது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்திட ஜவுளி உற்பத்தியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி 2 வருடங்களாகிறது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி, தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இறுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், பிப்ரவரி 26ம்தேதி, ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினருடன் அவரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிகமாக 3 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதாகவும், ஏப்ரல் மாதம் 26ம்தேதிக்குள் பேச்சுவார்த்தையின் மூலம் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுமென முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், கூலி உயர்வு தொடர்பாக வரும் 18ம் தேதி மாலை 7 மணிக்கு, கன்னிமார் திருமண மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இதில் தொழிற்சங்கத்தினர் பங்கேற்க வேண்டுமெனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. தொழிற்சங்கத்தினர் 75 சதவீதம் கூலி உயர்வு கேட்டு வரும் நிலையில், தற்காலிகமாக 3 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கைக்கும், ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கிய கூலி உயர்வுக்கும், 25 சதவீதம் வித்தியாசம் உள்ளதால், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்படும் முடிவை தொழிலாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

The post கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தும் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு