×

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு

  • காயமின்றி உயிர்தப்பினார்
  • வாலிபரை பிடித்து விசாரணை

டோக்கியோ: ஜப்பானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் புமியோ கிஷிடா மீது பைப் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் உள்ள காலியிடங்களுக்கும், உள்ளாட்சி பதவிகளுக்கும் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளன. இதில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று வாகயாமா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கைகாசாகி துறைமுகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேச தொடங்குவதற்கு முன்பு கூட்டத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் பிரதமர் புமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடிகுண்டை வீசினார். அந்த குண்டு, புமியோ கிஷிடா அருகே விழுந்தது. இதில் குண்டு வெடித்து புகை மூட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடினார்கள். உடனே பிரதமர் புமியோ கிஷிடாவை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். அதே போல் கூட்டத்தில் பங்கேற்ற யாரும் காயம் அடையவில்லை. மேலும் குண்டை வீசிய மர்ம நபரை மடக்கி பிடித்தனர். தப்பி ஓட முயன்ற அவரை கீழே தள்ளி பிடித்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.

பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினா் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக இருக்கிறார்களா? மர்ம பொருள் ஏதாவது இருக்கிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது. குண்டு வீசிய நபர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை. அது தொடர்பாக விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பிடிபட்ட நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த தாக்குதல் குறித்து ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலர் ஹிரோகாசு மாட்சுனோ கூறுகையில், ‘பிரதமர் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வாலிபரின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பிரதமர் கிஷிடா காயம் அடையவில்லை. அவர் தனது பிரசார பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வார். தேர்தல்கள் ஜனநாயகத்தின் மையமாகும். வன்முறை அச்சுறுத்தல்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்று கூறினார்.

  • ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
  • அபே கொல்லப்பட்டு 9 மாதங்கள் ஆகும் நிலையில் தற்போதைய பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மோடி கண்டனம்
ஜப்பான் பிரதமர் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,’ ஜப்பானில் எனது நண்பர் பிரதமர் கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை சம்பவம் நடந்ததை அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

ஜி 7 மாநாட்டிற்கு பலத்த பாதுகாப்பு
ஜப்பானில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் பிரதமர் கிஷிடா தனது சொந்த ஊரான ஹிரோஷிமாவில் மே 19 முதல் 21ந் தேதி வரை ஜி-7 தலைவர்களின் உச்சி மாநாட்டை நடத்துகிறார். இதில் கலந்து கொள்ள ஜி 7 நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஜப்பான் நாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும் இன்று ஜி-7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Japan ,Electoral General Assembly ,Tokyo ,Bumio Kishida ,Election General Assembly ,Dinakaran ,
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!