×

பூங்கா, விளையாட்டு திடல், நீர்நிலை, பள்ளி கட்டடம் உள்பட சென்னையில் 14 பணிகளுக்கு 24.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு.! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், 1 நீர்நிலை மேம்பாட்டுப் பணி, 1 மீன் சந்தை அமைத்தல், 1 இறைச்சிக் கூடம் நவீன மயமாக்குதல், 3 பள்ளிக்கட்டடங்கள் என மொத்தம் 14 திட்டப்பணிகளுக்கு ரூ.23 கோடி நிதி, பெருநகர சென்னை மாநகராட்சி பங்களிப்பு நிதி ரூ.1.34 கோடி என மொத்தம் ரூ.24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளர், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சிறந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையிலும் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்துகின்ற வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. நடைபாதை, கூழாங்கற்களுடன் கூடிய 8 வடிவிலான பாதை, யோகா செய்யுமிடம், அமரும் இருக்கைகள், கிரில் மற்றும் புதுமையான ஓவியங்களுடன் கூடிய சுற்றுச்சுவர், கழிவறைகளுடன் கூடிய பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டுள்ளதாக பூங்காக்கள் அமையும். விளையாட்டுத் திடல்கள் சென்னையில் வசிக்கும் மக்கள் சுறுசுறுப்பான மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையிலும், இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டும் வகையிலும் அமைந்திடும். இதில் கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று தங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் விளையாட்டுத் திடல்கள் அமையும்.

சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 2 பூங்கா, கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் அணுகு சாலையில் 1 பூங்கா, மணலி மண்டலத்தில் பொன்னியம்மன் நகர் 3வது தெருவில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, மணலி புதுநகர் 3வது தெருவில் திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, 35வது பகுதியில் 1 பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்தில் தமிழ் நகரில் நடைபாதை மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய 1 பூங்கா, குறிஞ்சி நகரில் நடைபாதை, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல் என மொத்தம் 8 பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் ரூ.4.28 கோடி மதிப்பில் அமையவுள்ளது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் குளத்தினை ரூ.2.99 கோடி மதிப்பில் சீரமைத்து, புனரமைத்தல் பணி மேற்கொள்ளப்படும்.

ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் 102 கடைகள், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளுடன் ரூ.2.69 கோடி மதிப்பில் மீன் சந்தை புதிதாக அமையும். சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சிக்கூடம் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அதனை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் பணிகள் ரூ.1.43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். சிறந்த கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டுகள், நூலகம், பசுமை வளாக வசதிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பள்ளிக் கட்டடங்கள் அமைக்கும் வகையில் திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம் சென்னை நடுநிலைப்பள்ளி, பெரம்பூரில் மார்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் புதிய காமராஜ் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 3 புதிய பள்ளிக் கட்டடங்கள் ரூ.12.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

The post பூங்கா, விளையாட்டு திடல், நீர்நிலை, பள்ளி கட்டடம் உள்பட சென்னையில் 14 பணிகளுக்கு 24.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு.! தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government ,Tamil Nadu ,Chief Minister ,Singara ,Chennai Corporation ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...