×

திருவெண்ணெய்நல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி
யில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடமில்லாமல் சாலை ஓரங்களிலும், ஏரிகளிலும் பேரூராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கும் பொழுது, சாலையை கடக்கும் பொதுமக்களுக்கும், வாகனம் ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் ஒவ்வாமை போன்ற நோய்கள் வருவதால் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

குப்பைகளை ஏரியில் கொட்டும் பொழுது ஏரி பாசன விவசாயிகள் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என வேதனையுடன் கூறிவருகின்றனர். மலட்டாற்றங்கரை பகுதியில் குப்பைகளை கொட்டும்போது, அது தடை செய்யப்பட்ட வனப்பகுதி என்று வனத்துறையைச் சார்ந்தவர்கள் பேரூராட்சி ஊழியர்களை தாக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் பேரூராட்சி தூய்மைப்பணி ஊழியர் ஒருவர் கூறுகையில், இந்த பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் அன்றாட கழிவுகளை தெருத் தெருவாக சென்று வாகனங்களில் சேகரித்து, அவற்றை கொட்டுவதற்கு இடமில்லாமல் சாலை ஓரங்களிலும், ஏரிகளிலும், மலட்டாற்றங்கரை பகுதிகளிலும் கொட்டி வருகிறோம். எந்த நேரத்தில் வனத்துறை ஊழியர்கள் தாக்குவார்களோ, பொதுமக்களும், விவசாயிகளும் எப்போது திட்டுவார்களோ, சண்டையிடுவார்களோ என்ற ஒருவித அச்சத்தில் அன்றாடம் எங்கள் தூய்மை பணியை செய்து வருகிறோம். நாங்கள் ஓரிரு நாட்கள் இந்த நகரத்தை சுத்தம் செய்யாவிட்டால் இந்த நகரம் எவ்வளவு நாற்றம் அடிக்கும் என்பதை பொதுமக்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம் என்று தூய்மை பணி ஊழியர் கூறினார்.

இது குறித்து பேரூராட்சி ஊழியர் கூறுகையில், பல ஆண்டு காலமாக பேரூராட்சி கழிவுகளை மலட்டாற்றங்கரை பகுதியில்தான் கொட்டி வந்தோம். ஆனால் தற்போது வனத்துறையைச் சேர்ந்தவர்கள் இது பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதி. மேலும் இது வனத்துறைக்கு சேர்ந்த நிலமாகும். எனவே இங்கே குப்பைகளை கொட்ட கூடாது என வனத்துறையைச் சேர்ந்தவர்கள் தடை விதிக்கின்றனர்.

எனவே வனத்துறைக்கு சொந்தமானது என கூறப்படும் அந்த நிலத்தை, தற்போது நில வகைப்பாடு மாற்றம் செய்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் நில வகைப்பாடு மாற்றம் செய்து அவ்விடத்தில் மத்திய அரசின் திடக்
கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

The post திருவெண்ணெய்நல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvanninallur ,Viluppuram ,Thiruvanneynallur ,Central Government ,Thiruvanneynallur district ,Thiruvannainallur ,
× RELATED விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி