×

அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலை திறப்பு 2024ல் ஒன்றியத்தில் எங்களது ஆட்சிதான்: தெலங்கானா முதல்வர் கேசிஆர் பேச்சு

திருமலை: ஐதராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது. இதில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் எங்கள் ஆட்சிதான் அமையும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார். இந்தியாவின் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளான நேற்று, தெலங்கானா மாநில அரசின் சார்பில், ஐதராபாத் நகரின் மையப்பகுதியில், ரூ.146 கோடியில் வெண்கலத்தில் அமைக்கப்பட்ட 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமை தாங்கினார். அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் முன்னிலை வகித்தார்.

திறப்பு விழாவுக்கு முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் வானில் இருந்து அம்பேத்கர் சிலை மீது தூவப்பட்டது. இதையடுத்து முதல்வர் சந்திரசேகர ராவ் சிலையை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகையில், ‘பி.ஆர்.அம்பேத்கர் உலகளாவிய மனிதர். அவர் முன்வைத்த கோட்பாடு உலகளாவியது. அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான நம்பிக்கை. தெலங்கானா புதிய செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அம்பேத்கர் பெயரில் மாநில அரசு விருதுகள் வழங்கப்படும். இதற்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்படும். யாரும் கோரிக்கை வைத்ததால் அம்பேத்கர் சிலை அமைக்கவில்லை.

அம்பேத்கர் மனித சிந்தனை வடிவத்தை உலகிற்கு காட்டவே சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டத்தால் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தலைமையில்தான் ஒன்றிய அரசு அமையும். இதை நான் சொல்வது எதிரிகளால் பொறுக்க முடியாது. மத்தியில் ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் தலித் பந்து திட்டம் மூலம் 25 லட்சம் தலித் குடும்பங்களுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். இந்த தொகை 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

The post அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலை திறப்பு 2024ல் ஒன்றியத்தில் எங்களது ஆட்சிதான்: தெலங்கானா முதல்வர் கேசிஆர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Telangana ,Chief Minister ,KCR ,Tirumalai ,Hyderabad ,Parliament ,Ambedgarh ,
× RELATED அமஇ மாநில தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்