×

ஹாரி புரூக் 100*, மார்க்ரம் 50 அசத்தல் 23 ரன் வித்தியாசத்தில் ரைடர்சை அபாரமாக வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

கொல்கத்தா: நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 23 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது. ஹாரி புரூக், மயாங்க் இணைந்து சன்ரைசர்ஸ் இன்னிங்சை தொடங்கினர். ஒரு முனையில் புரூக் அதிரடியாக ரன் குவிக்க, ரஸ்ஸல் வீசிய 5வது ஓவரில் மயாங்க் (9 ரன்), திரிபாதி (9 ரன்) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

சன்ரைசர்ஸ் 5 ஓவரில் 57 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்த நிலையில், புரூக் – கேப்டன் மார்க்ரம் இணைந்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். புரூக் 32 பந்தில் அரை சதம் அடிக்க, சுயாஷ் மற்றும் வருண் சுழற்பந்துவீச்சை பதம் பார்த்த மார்க்ரம் 25 பந்தில் 50 ரன் (2 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். புரூக் – மார்க்ரம் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வந்த அபிஷேக் ஷர்மா எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிற சன்ரைசர்ஸ் ஸ்கோர் இறக்கை கட்டி பறந்தது. புரூக் – அபிஷேக் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்க்க, சன்ரைசர்ஸ் ஸ்கோர் 200 ரன்னை எட்டியது. அபிஷேக் 32 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் வேகத்தில் ஆட்டமிழந்தார்ர். காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் ரஸ்ஸல் தொடர்ந்து பந்துவீச முடியாமல் வெளியேற, 19வது ஓவரின் எஞ்சிய 5 பந்துகளை ஷர்துல் வீசினார். சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. புரூக் 100 ரன் (55 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), கிளாஸன் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேகேஆர் பந்துவீச்சில் ரஸ்ஸல் 3, வருண் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி அடித்து ஆடியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து, 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நிதிஷ் ராணா அதிகபட்சமாக 75(41) ரன் விளாசினார். ரிங்கு சிங் 58* (31), ஜகதீசன் 36 (21) ரன் எடுத்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஜான்சென் 2 விக்கெட், மார்கண்டே 2 விக்கெட் கைப்பற்றினர். சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post ஹாரி புரூக் 100*, மார்க்ரம் 50 அசத்தல் 23 ரன் வித்தியாசத்தில் ரைடர்சை அபாரமாக வீழ்த்தியது சன்ரைசர்ஸ் appeared first on Dinakaran.

Tags : Harry Brooke ,Markram 50 ,Sunrisers ,Raiders ,Kolkata ,IPL league ,Knight Riders ,Sunrisers Hyderabad ,Harry Brook ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர்...