×

தகவல் வெளியாகி 5 மாதத்துக்குப் பின் ரபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார் அண்ணாமலை: வீட்டு வாடகை ₹45 லட்சம் உள்பட பல செலவுகளையும் நண்பர் அளிப்பதாக பேட்டி

சென்னை: ரபேல் வாட்ச் பில்லை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலையில் வெளியிட்டார். அப்போது தனது வீட்டு வாடகை பணம் ரூ.45 லட்சம் மற்றும் வாகனத்திற்கு டீசல், வீட்டு செலவு, வேலைக்காரர்களுக்கு சம்பளம் என அனைத்தையும் நண்பர் ஏற்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். இது மேலும் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அளித்த பேட்டி: நான் கைக்கடிகாரம் கட்டியிருக்கிறேன். இதற்கான பில்லை கொடுங்கள் என்று பிரச்னை ஆரம்பித்தது. அதன் பின்னர், இதுதொடர்பான அவதூறு பரப்பப்பட்டது. பெங்களூரில் வேலை பார்க்கும் போது பெறப்பட்ட லஞ்ச பணத்தில் இந்த கைக்கடிகாரத்தை வாங்கியிருக்கிறார். 2016ல் வாங்கினார். 2017 வாங்கினார். 2018ல் வாங்கினார். 2019ல் வாங்கினார். இப்படி வாங்கினார். அப்படி வாங்கினார் என்றனர்.

நான் அப்போது ஒரு சவாலை வைத்தேன். நான் பில்லை கொடுக்கும் போது, ஏப்ரல் 14ம் தேதி இந்த வாட்ச் பில்லை மட்டும் கொடுக்கப்போவது இல்லை. சில கேள்விகளையும் கேட்க போகிறேன் என்று சொன்னேன். நான் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது. ஒரு வாரத்திற்கு பின்னர் என்னிடம் கேள்வியை பத்திரிகையாளர்கள் ேகட்கலாம். 20 அல்லது 21ம் தேதி பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அரசியல்வாதியாக வந்தாச்சு. குடும்பத்தில் யாரும் அரசியல்வாதி கிடையாது. எனக்கு என்று ஒரு பாதை போடவில்லை. அரசியல்வாதியாக ஒரு மாதத்திற்கு எனக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை சாதாரணமாக ஒரு மாநில தலைவராக செலவாகும். அண்ணாமலை சம்பளத்தில் 7 லட்சம், 8 லட்சம் எவ்வாறு செலவு செய்ய முடியும். சுற்றியிருக்கக்கூடிய நண்பர்களின் உதவி, சுற்றியிருக்கக்கூடிய கட்சியினரின் உதவியை வைத்து நடத்தி கொண்டு இருக்கிறேன்.

3 பிஏக்கள் இருக்கிறார்கள் என்றால், 3 பிஏக்களின் சம்பளத்தை நண்பர்கள் கொடுக்கிறார்கள். கார் இருக்கிறது. காருக்கான டீசலை கட்சி கொடுக்கிறது. சிறிய வீட்டில் அமைதியாக இருந்து கொண்டிருந்தேன். சிஆர்பிஎப் பாதுகாப்பு வந்தவுடன் அந்த சிறிய வீடு ஆகாது. அந்த வீட்டிற்கு பாதுகாப்பு பத்தாது என்று பெரிய வீட்டிற்கு போனேன். அதற்கான வாடகையை இன்னொருவர் கொடுக்கிறார். முதல் தலை முறை அரசியல்வாதிக்கு இருக்கக்கூடிய பிரச்னை நல்ல மனிதர்களின் உதவியோடு தான் என்னுடைய அரசியல் வாழ்க்கை நகர்கிறது.

காரணம் எனக்கு இருக்கக்கூடிய பிரச்னை. வீட்டிற்கான வாடகையை நண்பர் ஒருவர் கொடுப்பார். நான் பயன்படுத்தும் கார் நண்பர் ஒருவரின் பெயரில் உள்ளது. அதை நான் பயன்படுத்துகிறேன். சுற்றியிருக்கக்கூடிய பிஏக்களுக்கு என்னுடன் படித்த நண்பர்கள் கம்பெனி நடத்துகிறார்கள் அவர்கள் கணக்கில் இருந்து 3 பேருக்கு சம்பளம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். வாழ்கின்ற வாழ்க்கை சுற்றியிருக்கக்கூடிய நல்ல நண்பர்களுடன் போய் கொண்டு இருக்கிறது. எனது வங்கி கணக்கு முழுமையாக 212 பக்கம் உள்ளது. எனது வங்கி கணக்கு. ஐபிஎஸ் அதிகாரியாக முதல் நாள் வாங்கிய சம்பளம் முதல் அதில் உள்ளது. நான் எம்பிஏ படித்த போது 11 லட்சம் ரூபாய் கடனை கட்டுவதற்கு 7 ஆண்டுகள் சிரமப்பட்டு கடனை கட்டினேன். 27.1.22 முதல் கிரடிட் கார்டு பில் போன மாதம் வரை நான் கட்டிய பில், வாட்ச் விவரங்கள் அனைத்தையும் அதில் பார்ப்பீர்கள். இதை வைத்து எப்படி இவர் மாநில தலைவர் பிழைப்பை நடத்த முடிகிறது என்று கேட்டால் அது நியாயமானது.

இந்த வாட்ச் ரபேல் நிறுவனத்துடையது. பிரான்ஸ் நிறுவனம். உலகத்தில் மொத்தம் இருப்பதே 50 வாட்ச் தான். இந்த வாட்ச் 147வது வாட்ச். ரபேல் விமானம் எப்படியிருக்குமோ அப்படி இந்த வாட்ச் இருக்கும். இந்தியாவில் 2 வாட்ச் உள்ளது. சாதாரணமாக கட்ட முடியாது. காரணம் வெயிட் அதிகமாக இருக்கும். இந்தியாவில் 2 வாட்ச் தான் விற்பனையாகியது. மும்பையில் ஒரு எம்என்சி நிறுவனத்தில் உள்ளவர் கட்டியிருக்கிறார். கோவையில் உள்ள நிறுவனத்திடம் விற்கப்பட்டது. மே மாதம் 27ம் தேதி வாட்ச் வாங்கினேன். இந்த வாட்சை நாளைக்கு போய் வாங்க வேண்டுமென்றால் வாங்க முடியாது. மார்க்கெட்டில் இல்லை. இந்த வாட்ச் 2021 மார்ச் மாதத்தில், சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கினார். மே மாதமத்தில் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு, வாட்சை கொடுப்பதற்கு ஒப்பு கொண்டார். லஞ்சமாக வாங்கினார் என்று சொல்வது ஏற்புடையது. அல்ல. அவரை 2 வருடமாக தெரியும். 27.5.21ல் இருந்து இருக்கும் ஒரே வாட்ச் இது தான். 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலைக்கு நண்பர் கிப்ட்
அண்ணாமலை தற்போது சென்னையை அடுத்த பனையூரில் பிரமாண்ட வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டிற்கான ஒரு மாத வாடகை மூன்றே முக்கால் லட்சம் ரூபாய். அவரது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க செலவு, அவரது செலவு, 3 பிஏக்கள் செலவு, டிரைவர் சம்பளம் என்று பல்வேறு செலவுகளுக்கு மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் ஆகும். அப்படி பல லட்சம் ரூபாய் செலவை நண்பர்கள் மாதம் மாதம் செய்கிறார்கள் என்று அண்ணாமலை சொல்கிறார். அப்படி நண்பர்கள் இருப்பது என்பதை ஏற்று கொள்ள முடியாத ஒன்று. அப்படி நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒன்று, அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது இவர்களால் அவர்கள் பயனடைந்திருக்க வேண்டும் அல்லது அண்ணாமலையால் அவர்கள் காரியம் சாதித்து இருக்க வேண்டும் என்ற கேள்வியை ஆர்வலர்கள் எழுப்ப தொடங்கியுள்ளனர். ஓசிக்கு எந்த நண்பர் இப்படி செலவை ஏற்பார்கள் என்ற நியாயமான கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

The post தகவல் வெளியாகி 5 மாதத்துக்குப் பின் ரபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார் அண்ணாமலை: வீட்டு வாடகை ₹45 லட்சம் உள்பட பல செலவுகளையும் நண்பர் அளிப்பதாக பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rafael ,Chennai ,Anamalai ,
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி