×

அட்சய திருதியை முன்னிட்டு, வெள்ளி பொருட்கள் உற்பத்தி மும்முரம்: வெளி மாநில ஆர்டர்களால் மகிழ்ச்சி

சேலம்: அட்சய திருதியை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. இதனால் சேலம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கும்பகோணம், சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. இப்பகுதிகளில் வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி, டம்ளர், குங்குமச்சிமிழ், தட்டு, காமாட்சி விளக்கு, குடம் உள்பட பலவகை வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஓணம், நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் உற்பத்தி அதிகரிக்கும். அதேபோல் விற்பனையும் களை கட்டும். இந்நிலையில் வரும் 23ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் பெரும்பாலான மக்கள் தங்கம், வெள்ளிப்பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அட்சய திருதியை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளதால் சேலம் சுற்று வட்டார பகுதிகளில் பொருட்கள் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து சேலம் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சேலத்தில் செவ்வாய்பேட்டை, குகை, சிவதாபுரம், பனங்காடு, கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனூர், பள்ளப்பட்டி, தாதகாப்பட்டி, மணியனூர், கரட்டூர், காட்டூர், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் வெள்ளிப்பொருட்கள் தயாரிப்பு பட்டறைகள் ஆயிரக்கணக்கில் உள்ளது.

இத்தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக சரிவர முகூர்த்தங்கள் இல்லாததால் வெள்ளிப்பொருட்களின் விற்பனை குறைந்தது. அதேபோல் வெளிமாநிலங்களிலும் விற்பனை சரிந்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு பிறகு தொடர்ந்து முகூர்த்தங்கள் அதிகளவில் வருகிறது. முகூர்த்தம் மற்றும் அட்சய திருதியை காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வெள்ளிப்பொருட்கள் கேட்டு அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளது. வழக்கமாக வரும் ஆர்டரில் இருந்து 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பட்டறைகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அட்சய திருதியை முன்னிட்டு, வெள்ளி பொருட்கள் உற்பத்தி மும்முரம்: வெளி மாநில ஆர்டர்களால் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Akshaya Trithi ,Salem ,Akshaya ,Trithi ,Akshay Trithi ,
× RELATED அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்க...