×

இந்திராநகர் ரயில் நிலையம் அருகே டிப்பர் லாரி மோதியதில் நடைமேம்பாலம் சேதம்

வேளச்சேரி: ராஜிவ்காந்தி சாலையில், இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையம் அருகே பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. டைடல் பார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், பறக்கும் ரயில் நிலையம் சென்று வருவதற்கு இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று அதிகாலை மண் கொட்டிவிட்டு, அதன் பின்பகுதியை கீழே இறக்காமல் வந்த டிப்பர் லாரி, இந்த நடை மேம்பாலத்தின் மீது வேகமாக மோதியது. இதில் நடை மேம்பாலத்தின் பக்கவாட்டு இரும்பு ராடு உடைந்து சேதமானது.

டிப்பர் லாரியும் நடை மேம்பாலத்தில் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து வந்த போலீசார், பயணிகள் மற்றும் பொதுமக்களை அந்த நடை மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால், அப்பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து ராட்சத கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் அங்கப்பன் (45) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post இந்திராநகர் ரயில் நிலையம் அருகே டிப்பர் லாரி மோதியதில் நடைமேம்பாலம் சேதம் appeared first on Dinakaran.

Tags : Indiranagar railway station ,Rajiv Gandhi Road ,Indira Nagar Flyover Railway Station ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு