×

வெள்ளியூர், செம்பேடு கிராமத்தில் புதிய மருந்தக கட்டிடம், கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா ?..ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி

திருவள்ளூர்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேசும்போது, ‘’திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், செம்பேடு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்றார். இதற்கு பதில் அளித்து மீன்வளம், மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘’பூந்தமல்லி தொகுதி, எல்லாபுரம் ஒன்றியம், செம்பேடு கிராமத்தில் நேரடியாககால்நடை மருத்துவமனை அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை’ என்றார். ‘’இல்லை என்று சொல்லாத மனம் படைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சியில் இன்றைக்கு 5 ஆயிரம் கால்நடைகளும் 5 கிலோ மீட்டருக்கும் அதிகமான சுற்றுப்புறமும் இருந்தால், அங்கே கிளை மருந்தகம் அமைக்கலாம்’’ என்று சட்டம் சொல்கிறது.

அந்த அடிப்படையில், எல்லாபுரம் ஒன்றியம், செம்பேடு கிராமத்தில் அமைச்சர் கண்டிப்பாக ஒரு கால்நடை மருந்தகத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார். அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ‘’அரசின் வரன்முறைகளின் படி, நேரடியாக கால்நடை மருத்துவமனை துவக்க இயலாது. முதலில், அந்தப் பகுதியில் 3 ஆயிரம் கால்நடை அலகுகள் இருக்கும் பட்சத்தில், அங்கே கால்நடை கிளை நிலையம் துவக்கவும் அந்தக் கிளை நிலையம் சுமார் 30 கால்நடைகளுக்கு குறையாமல் சிகிச்சை வழங்கும் பட்சத்தில், அந்தப் பகுதியில் 5 ஆயிரம் கால்நடைகள் இருக்கும் பட்சத்தில், அந்தக் கிளை நிலையம் கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தப்படும்.

அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் தினமும் 40 கால்நடைகளுக்கு குறையாமல் சிகிச்சை வழங்கும் பட்சத்தில் அந்த மருந்தகம் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் அரசின் வரன்முறைகளில் உள்ளது. எனவே, கால்நடை கிளை நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்’ என்றார். வெள்ளியூர் என்பது கொசஸ்தலை ஆற்றை ஒட்டி இருக்கக்கூடிய கிராமம். மிகப் பெரிய விவசாயம் சார்ந்திருக்கக்கூடிய அந்தக் கிராமத்தில் 40 ஆண்டு காலமாக கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனையானது சிதிலமடைந்து இப்போது பொதுப் பணித் துறையினால் தகுதியற்றது என்று சான்றிதழையும் வழங்கி இருக்கிறார்கள்.

எனவே அமைச்சர் தங்களுடைய மானியக் கோரிக்கையில் ரூ.16 கோடிக்கு இந்த அரசாங்கம் கால்நடை மருந்தகங்கள், கட்டடங்கள் கட்டித் தரப்படும் என அறிவித்திருக்கிறார்கள். அதில் ஒரு மருந்தகக் கட்டடத்தை வெள்ளியூர் கிராமத்தில் கட்டித் தரப்படுமா என்று எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கேட்டார். இதற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ‘’அந்த இடத்தை துறையின் மூலம் ஆய்வுச் செய்து, புதிதாக இடஒதுக்கீடு செய்யப்படுகின்ற அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கானச் சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்’’ என்றார்.

The post வெள்ளியூர், செம்பேடு கிராமத்தில் புதிய மருந்தக கட்டிடம், கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா ?..ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Velliyur, Sempedu village ,A.Krishnaswamy ,MLA ,Thiruvallur ,Tamil Nadu Legislative Assembly ,Thiruvallur District ,Ellapuram Union ,Legislative Assembly ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...