×

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்: மதுரை சரக டிஐஜி அதிரடி

மதுரை: மதுரையில் வியாபாரியிடம் ரூ.10 லட்சத்தை பறித்த பெண் இன்ஸ்பெக்டரை மதுரை சரக டிஐஜி பொன்னி நேற்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த அர்சத் என்பவர் பேக் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், பேக் தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த ஆண்டு ரூ.10 லட்சத்துடன் தேனி ரோடு வழியாக மதுரைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி ஆகியோர் வாகன சோதனை நடத்தி, அர்சத் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக் கொண்டதாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, இன்ஸ்பெக்டர் வசந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பணியிலிருந்தும் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வசந்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து ஊமச்சிக்குளத்தில் உள்ள வீட்டில் இருந்து காரில், இன்ஸ்பெக்டர் வசந்தி மார்ச் 31ம் தேதி காலை தப்பிக்க முயன்றார். தகவலறிந்து வந்த தனிப்படை போலீசார், காரை வழிமறித்து அவரை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், இறங்க மறுத்து காரிலேயே பிடிவாதமாக அமர்ந்திருந்தார். இதையடுத்து பெண் போலீசார், அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விசாரணைக்குப்பின் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் வசந்தியை மதுரை சரக டிஐஜி பொன்னி நேற்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். இது போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்: மதுரை சரக டிஐஜி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,DIG ,Madurai Goods ,Ponni ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை