×

சொப்னா கடத்திவந்த தங்க கட்டிகளை விற்க உதவி; கோவை தங்க பட்டறை அதிபரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை

கோவை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2020ம் ஆண்டில் விமான நிலையத்தில் 13.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் சிக்கியது. இந்த வழக்கில் ஐக்கிய அரசு அமீரக முன்னாள் ஊழியரான சொப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்றார். இவருக்கு உதவிய நபர்கள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ மற்றும் அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சொப்னா சுரேஷ் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அரபு நாடுகளில் இருந்து கிலோ கணக்கில் கடத்தி வரப்பட்ட தங்கம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் குறிப்பாக தென்னிந்தியாவில் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நகைகளாக மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவையிலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மத்திய அமலாக்க துறை அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சொப்னா சுரேஷ்சுக்கு தங்கம் விற்பனையில் உதவியதாக கோவையில் தங்க நகைப்பட்டறை நடத்தி வரும் நந்தகோபால் (46) என்பவருக்கு சொந்தமான நகைப்பட்டறை மற்றும் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ராஜ வீதி மற்றும் பவள வீதியில் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். நந்த கோபாலிடம் தங்க கட்டிகள் வாங்கியது, விற்பனை செய்தது, ஆபரணம் தயாரித்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தனர்.

தங்க கட்டிகளை யார் தந்தது? சொப்னா சுரேஷ் அறிமுகம் செய்தது யார்? அவருக்கு பணம், நகை, பொருட்கள் வழங்கப்பட்டதா? அவர் தங்க கட்டிகள் கொடுத்து பணம் வாங்கி சென்றாரா? என்பது குறித்தும் அதிகாரிகள் கேட்டனர். நந்தகோபால் மும்பை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி வந்து தொழில் செய்வதாக கூறியுள்ளார். சில மாதத்துக்கு முன்பு, நந்தகோபாலிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதில் கணக்கில் காட்டாத 32 பவுன் தங்க நகை மற்றும் 2.50 லட்ச ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

The post சொப்னா கடத்திவந்த தங்க கட்டிகளை விற்க உதவி; கோவை தங்க பட்டறை அதிபரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sobna ,Cov Gold ,Workshop ,Govai ,Thiruvananthapuram, ,Kerala ,Cove Gold Workshop ,Chancellor ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்