×

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழப்பு… பஞ்சாப் மாநிலம் பதிண்டா முகாமில் ஒரே நாளில் 5 ராணுவ வீரர்கள் பலியான சோகம்!!

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்றிரவு மேலும் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ முகாம் நாட்டின் மிகப் பெரிய ராணுவ நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த ராணுவ முகாமிற்குள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த சாகர் பானே (25), யோகேஷ் குமார் (24) துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.

அதே போல், அருகில் இருந்த மற்றொரு அறையில் சந்தோஷ் நாகரால் (25), கமலேஷ் (24) ஆகியோர் இறந்து கிடந்தனர். அவர்களது உடம்பில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழ்நாட்டையும் இருவர் கர்நாடக மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கப்பள்ளி அருகே பெரிய வனவாசி மஸகாலியூர் பனங்காட்டை சேர்ந்த நெசவு தொழிலாளி ரவியின் மகன் கமலேஷ் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத கமலேஷ் 1.5 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்துவிட்டு திரும்பி சென்றுள்ளார்.மற்றொருவர் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த ஜெயராஜின் மகன் யோகேஷ் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் நாளை சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பதிண்டா முகாமில் நேற்று இரவு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.தனது துப்பாக்கியை சரிபார்க்கும் போது தவறுதலாக குண்டு பாய்ந்து லகு ராஜ் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை ராணுவ அதிகாரி குர்தீப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளது. 2 மர்ம நபர்கள் வெள்ளை பைஜாமா அணிந்து கையில் துப்பாக்கி மற்றும் கோடாரியுடன் வெளியே வந்ததை பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

The post துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மேலும் ஒருவர் உயிரிழப்பு… பஞ்சாப் மாநிலம் பதிண்டா முகாமில் ஒரே நாளில் 5 ராணுவ வீரர்கள் பலியான சோகம்!! appeared first on Dinakaran.

Tags : Punjab State Battinda Camp ,Chandigarh ,Punjab State Battinda ,Punjab ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்