×

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான தாமரைக்குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும்

முத்துப்பேட்டை, ஏப்.13: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான தாமரைக்குளத்தின் கரைகளை உயர்த்தி சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நூறு குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தற்பொழுது பொதுமக்கள் கண்ணில் படுவது பத்துக்கும் மேற்பட்ட குளங்கள் தான். அதுவும் மக்கள் பயன் படுத்த முடியாத அளவில் மாறி வருவதால் பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலையும் வேதனை அடைய வைக்கிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட பேட்டையில் உள்ள தாமரைக்குளம் தான் மிகப்பெரிய பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த குளத்தில் தான் சுற்றுபுறத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் குளித்தும், மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், அந்த பகுதிக்கு நீராதாரத்தை பெற்று தரும் ஒரு குளமாகவும் உள்ளது. இந்தநிலையில், தற்போதைய இந்த தாமரைக்குளத்தையும் சுற்று பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் குளத்திற்கு நீர் வரத்து பாதையும் தடைப்பட்டு குளம் சுருங்கி குட்டையாகி வருகிறது. மிச்சம் மீதி குளத்தையும் வேலிக்கருவை முள் மரங்கள் படர்ந்து தண்ணீரையும் மாசு படுத்தி வருகிறது. தற்போது அடித்து வரும் வெயில் காரணமாக, குளமும் வறண்டு வருகிறது. சுற்றுப்புற தடுப்பு சுவர்களும் சேதமாகி ஆங்காங்கே இடிந்து விழுந்து காணப்படுகிறது. எனவே, தாமரைக்குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்புகளையும், குளத்தின் சுற்றுப்புறங்களில் படர்ந்து மண்டியுள்ள வேலிக்கருவை முள்மரங்களையும் அகற்ற வேண்டும். மேலும், தாமரைக்குளத்தின் கரைகளை மேம்படுத்தி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயன்ஏதும் இல்லை.

அதிமுக அரசின் பேரூராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போதைய திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பேட்டை பகுதி மக்கள் சிலர் கூறுகையில், மிகப்பெரிய பரப்பளவு கொண்டது தாமரைக்குளம். பாமணியாற்றிலிருந்து நீர் ஆதாரம் பெறப்படுகிறது. இதன் உபரிநீர் கோரையாற்றில் வெளியேற்றப்படுகிறது. நடப்பாண்டு, ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் குளத்தில் போதிய தண்ணீர் நிரம்பவில்லை. குளத்தில் எஞ்சியிருக்கும் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. மேலும் குளத்தின் பல பகுதிகளை பலரும் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். குளத்தில் கருவை மரத்திலிருந்து உதிரும் இலை தழை முட்களால் குளத்து நீரும் குழம்பியுள்ளது. எனவே தாமரைக்குளத்தின் கரைகளை மேம்படுத்தி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என்றனர்.

The post முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான தாமரைக்குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tamaraikulam ,Muthupet ,Municipality ,Muthupet Municipality ,
× RELATED கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!!