×

மறவாமதுரை, ராப்பூசலில் ஜல்லிக்கட்டு: 32 பேர் காயம்

பொன்னமராவதி, ஏப்.13: பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை, இலுப்பூர் அருகே ராப்பூசலில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மொத்தம் 32 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை ஒலியநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று (12ம் தேதி) காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் 850 காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். அதேபோல், மாடுபிடி வீரர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை, புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மட்டும் சிறுபான்மை நல அலுவலர் அமீர் பாட்ஷா, பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வாடிவாசலில் முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக காளைகள் சீறிப்பாய்ந்து வெளியேறின. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக காளைகள் சீறிப்பாய்ந்தது. பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு காளைகளின் திமிலை அடக்கினர்.

இதில், காளைகள் முட்டியதில் வீரர்கள் 2 பேர், பார்வையாளர்கள் 4 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், மின்விசிறி, டேபிள், குக்கர், ஹாட் பாக்ஸ், சில்வர் அண்டா மற்றும் ரொக்க பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டிஎஸ்பி அப்துல்ரகுமான் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் முனியாண்டவர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று (புதன்கிழமை) காலை 8.20 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் 810 காளைகள் களம் கண்டன. 200 மாடுபிடி வீரர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பங்கேற்றனர். போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது தொடர்ந்து மற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டது. மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். இப்போட்டியில் 21 பேர் காயமடைந்தனர். மருத்துவ துறை சார்பில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் குழுவினர் உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர்.

இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்கு இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் பாபு தலைமையில் கால்நடை மருத்துவ குழுவினர் 30 பேர் மருத்துவ பரிசோதனை செய்தனர். போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, சைக்கிள், கட்டில்,அயர்ன் பாக்ஸ்,சில்வர் அண்டா,வெள்ளி காசு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வந்திருந்து திடலின் இருபுறமும் திரண்டு நின்று கண்டு போட்டியை கண்டு ரசித்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி காயத்ரி தலைமையில் போலீஸார், ஊர்காவல்படையினர் 107 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post மறவாமதுரை, ராப்பூசலில் ஜல்லிக்கட்டு: 32 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Marawamadurai ,Rapusal ,Jallikad ,Ponnamarawati ,Jallikat ,Marawamadurai, Lilipur ,Bonnamarawati ,Maravadurai ,
× RELATED ராப்பூசலில் ஜல்லிக்கட்டு: 900 காளைகள் சீறிப்பாய்ந்தன.!