×

தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பலியான சோகம் பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் தாக்குதலா? குடும்ப தகராறு காரணமா?

பதின்டா: பஞ்சாபில் பதின்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழக வீரர்கள் இருவர் உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ முகாம் நாட்டின் மிகப் பெரிய ராணுவ நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த ராணுவ முகாமிற்குள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த சாகர் பானே (25), யோகேஷ் குமார் (24) துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.

அதே போல், அருகில் இருந்த மற்றொரு அறையில் சந்தோஷ் நாகரால் (25), கமலேஷ் (24) ஆகியோர் இறந்து கிடந்தனர். அவர்களது உடம்பில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழ்நாட்டையும் இருவர் கர்நாடக மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நடந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை. சகோதரர்களிடையேயான சண்டை கொலையில் முடிந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது பஞ்சாப் போலீசாருடன் சேர்ந்த ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ முகாமில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதற்கிடையே, “இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களும், இன்சாஸ் ரக துப்பாக்கி ஒன்றும் காணாமல் போனது. இது குறித்து நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று கூடுதல் டிஜிபி பார்மர் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே விளக்கம் அளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் வேறு யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உயிர் மற்றும் பொருள் சேதமோ இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மர்மநபர்கள் இருவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் பார்த்த ராணுவ வீரர் ஒருவர், “அடையாளம் தெரியாத இரண்டு பேர் வெள்ளை நிற குர்தா-பைஜாமா அணிந்து வந்தனர். அவர்களின் முகம், தலை துணியினால் மூடப்பட்டிருந்தது. ஒருவனது கையில் இன்சாஸ் துப்பாக்கியும் மற்றவனுடைய கையில் கோடரியும் இருந்தது,’’ என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

  • துப்பாக்கி கண்டெடுப்பு
    துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்ட இன்சாஸ் ரக ரைபிள் மற்றும் 28 தோட்டாக்களில் சுடப்பட்டது போக மீதம் இருந்த தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் எத்தனை தோட்டாக்கள் மீதமுள்ளன என்பது குறித்து புலனாய்வு விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று கூறினர்.

The post தமிழகத்தை சேர்ந்த 2 பேர் பலியான சோகம் பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் தாக்குதலா? குடும்ப தகராறு காரணமா? appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Punjab army ,Bathinda ,Bathinda army camp ,Punjab ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...