×

அவசர வழக்காக விசாரிக்க கோரிய விவகாரம்: இந்த விளையாட்டு எங்கிட்ட வேணாம்!.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்டிப்பு

புதுடெல்லி: அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரியதற்கு, இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கடிந்து கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நேற்று நீதிமன்ற பணிகளை மேற்கொண்டிருந்த போது வழக்கறிஞர் ஒருவர், தனது வழக்கை அவசரமாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆவேசமடைந்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘உங்களது மனு வரும் 17ம் தேதி விசாரணைக்கான லிஸ்ட்டில் உள்ளது. அப்படி இருக்கையில் மற்றொரு அமர்வில் விசாரிக்க வேண்டும் என்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர், ‘எனது வழக்கை போன்ற மற்றொரு வழக்கை முன்கூட்டியே எடுத்து விசாரணை நடத்தினீர்கள்’ என்றார். தொடர்ந்து தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘உங்களது வழக்கை 17ம் தேதி விசாரிக்கிறோம். முன்கூட்டியே விசாரிக்க முடியாது. மற்ற வழக்குடன் உங்களது வழக்கை ஒப்பிட்டு கேட்க வேண்டாம்.

இந்த விளையாட்டை என்னிடம் விளையாட வேண்டாம். இவ்வாறு செய்வது சரியல்ல’ என்றார். தலைமை நீதிபதியின் மனநிலையை உணர்ந்த அந்த வழக்கறிஞர், தனது கோரிக்கைக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‘எனது அதிகார வரம்பிற்குள் தலையிட முயற்சிக்காதீர்கள்’ என்றார். அவசர வழக்கு விவகாரத்தில் இவ்வாறு வழக்கறிஞர் ஒருவரிடம் கடிந்து கொண்டது முதல் முறை அல்ல, ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரியில், வழக்கறிஞர்களுக்கு அறைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கேட்டுக் கொண்ட போது, அவரிடம் தலைமை நீதிபதி கடிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அவசர வழக்காக விசாரிக்க கோரிய விவகாரம்: இந்த விளையாட்டு எங்கிட்ட வேணாம்!.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Suprem Court ,Chief Justice ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...