×
Saravana Stores

கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில் பங்குனி 7ம் திருவிழா அனல் பறக்கும் வெயிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம்

அம்பை : கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில் 7ம் திருவிழாவான நேற்று அனல் பறக்கும் வெயிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம், கும்பிடு நமஸ்காரத்துடன் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பூங்கோவில் சப்பரம், அன்ன வாகனம், கிளி வாகனம், புஷ்ப அலங்கார சப்பரம், காமதேனு வாகனம், பூம்பல்லாக்கு, ரிஷபம் சிம்மாசனம், சப்பரம் வீதி உலா சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

7ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று கல்லிடைக்குறிச்சி செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உலோபா முத்திரை உடனுறை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7 மணிக்கு பச்சை சாத்தி வீதியுலாவும் நடைபெற்றது, பின்னர் 11 மணிக்கு கோயிலில் இருந்து ஆற்றங்கரைக்கு சென்று மதியம் 12.05க்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம் ஊர்வலம், அங்கபிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் செய்து ஊர்வலமாக வந்தனர்.

21 பால்குட ஊர்வலத்துக்கு முன்பு மாணிக்க வாசகர் வழிபாட்டு குழு சார்பில் சிவனடியார்கள் இணைந்து திருவாசகம் முற்றோதுதல் பாடி வந்தனர். இந்த ஊர்வலம் தளச்சேரி மானேந்தியப்பர் கோயில், பிள்ளையார் கோயில், சுப்பிரமணியசாமி கோயில்களை கடந்து முக்கிய வீதிகளான வேம்படி அம்மன் கோவில் தெரு, அகஸ்தியர் கோவில் கீழத்தெரு, அகஸ்தியர் சன்னதி தெரு வழியாக பிற்பகல் 1.45மணிக்கு கோயிலை வந்தடைந்தது.

7ம் திருநாளான நேற்று அனல் பறக்கும் வெயிலில் அங்க பிரதட்சணம் மற்றும் கும்பிடு நமஸ்காரம் செய்கின்ற பக்தர்களின் வசதிக்காக டேங்கர்கள் மூலம் வீதிகளிலும், ஒவ்வொரு வீட்டினரும் முன்பகுதியில் தண்ணீர் தெளித்தும் தரையை குளிர வைத்தனர். ஊர்வலம் வரும் வீதிகள் அனைத்திலும் சாதி, மதங்களை கடந்து அனைத்து தரப்பினரும் சமுதாய அமைப்புகள், தனி நபர்கள், பொது அமைப்பினர் என ஏராளமான நீர், மோர், பானக்காரம் பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர், இந்த திருவிழாவில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த ஆண் பக்தர்கள் அங்க பிரதட்சணமும், பெண் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரமும் செய்து சுவாமியை வழிபட்டனர். மதியம் 2 மணிக்கு மேல் சுவாமி அம்பாளுக்கு பால்குட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், மாலை 4.30 மணிக்கு அன்னம் சொரிதலும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு புஷ்ப அலங்கார மின்னொளி சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவிற்கு பின்னர் இரவு 8 மணிக்கு மேல் குமார கோயில் தெற்கு ரதவீதியில் அகஸ்தியருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில் செங்குந்தர் சமுதாயத்தை சேர்ந்த அறங்காவலர்கள் சங்கர நாராயணன், முருகாண்டி, பாலசுப்பிரமணியன் ஆலோசகர்கள் சங்கரன், சங்கரலிங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், நாகராஜன், தெட்சிணாமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில் பங்குனி 7ம் திருவிழா அனல் பறக்கும் வெயிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் appeared first on Dinakaran.

Tags : Kallidaikirichi Agastiyar Temple Bankuni 7th Festival of Anal Flying ,Pradathanam ,Kumbidu Namaskaram ,7th ,Kallidaikirichi Agastiya Temple ,Anal Flying ,Kallidaikurichi Agastiyar Temple Bankuni 7th Festival of Anal Flying in ,Pradhatana ,
× RELATED பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து!