

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்குப்பின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதன்முறையாக சட்டமன்றம் வந்தார். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். சட்டப்பேரவையில் 2023- 24ம் நிதியாண்டிற்கான துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்றைய தினம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த புயல் கணிப்பு துறை சார்பில் இன்று காலை நடைபெறக்கூடிய சட்டப்பேரவை நிகழ்வில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகர காவல் திருத்தச் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்கிறார். அதேபோல 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் தமிழ்நாடு திருத்தச் சட்ட முன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்றைய தினம் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்கிறார். பொள்ளாச்சியில் மேற்கு புறவழிசாலைகள் குறித்து அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், களியக்காவிளை அங்கவாடி மையம் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவுள்ளனர்.
மிக முக்கியமாக இன்றைய தினம், சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற மூத்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர், பதவியேற்பிற்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு வந்திருந்தார். சட்டப்பேரவை தலைவர் அறையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து கடந்த மாதம் 15ம் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஈவிகேஎஸ் உடல்நிலை முழுமையாக குணமடைந்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தனது இல்லத்திற்கு திரும்பினார். தற்போது உடல்நிலை முழுவதுமாக சரியாகிவிட்டதால் இன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அவர் முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து அவரை வரவேற்றார்.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்குப்பின் முதன்முறையாக சட்டமன்றம் வந்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!! appeared first on Dinakaran.