×

52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சம் நலஉதவி

தர்மபுரி, ஏப்.12: தர்மபுரியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 52 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, நலவாரியத்தில் பதிவு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு, பராமரிப்பு உதவி தொகை, வங்கிகடன் மானியம், உதவி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு பதிவு, புதுபித்தல், வேலைவாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கு வங்கிகடன் மற்றும் வீடுகட்டுவதற்கு கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 222 மனுக்கள் வழங்கப்பட்டது.

மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த அன்றைய தினமே 7 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.22,600 மதிப்பிலான காதொலி கருவிகள் மற்றும் சக்கர நாற்காலியினையும், 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களையும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.19 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என மொத்தம் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், உள்ளிருப்பு மருத்துவர் காந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சம் நலஉதவி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Grievance Redressal Day ,Dinakaran ,
× RELATED காயங்களுடன்கிடந்தவர் சாவு