×

நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

நாகப்பட்டினம்,ஏப்.12: நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடந்த தீமிதி திருவிழாவில் 64 கிராம மீனவர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 5ம் தேதி அம்பாள் கரக சமேதராய் எண்திசை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 6ம் தேதி அம்பாள் திருவீதியுலா நடந்தது. 7ம் தேதி மஞ்சள் காப்பு அலங்காரமும், 8ம் தேதி இரவு தேரோட்டம் நடந்தது. இதில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீரன், விநாயகர், முருகன், ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆகியோர் வெள்ளி சிம்மனவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் (10ம் தேதி) இரவு நடந்தது. அப்போது மகாகாளியம்மன் மணிமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்புகட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். செண்டை மேளம் முழங்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 64 மீனவ கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்தனர். அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் மகாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

The post நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi Festival ,Nagapattinam Keechanguppam Maha Kaliamman Temple ,Nagapattinam ,Dimiti festival ,Panguni festival ,
× RELATED பூச்சாத்தனூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா