×

ரூ5,900 கோடி மோசடி; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் அரிஹரன் கைது: ரூ231 கோடி பணம் ஏமாற்றினார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 84 ஆயிரம் பேரிடம் ரூ5,900 கோடி மோசடி செய்த வழக்கில், முக்கிய ஏஜென் அரிஹரன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் அரிஹரன் ரூ231 கோடி வசூலித்து கொடுத்து ரூ10 கோடி கமிஷன் பெற்றதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சென்னை கிண்டியை தலைமையிடாக கொண்டு ‘ஐஎப்எஸ்’ என்ற பெயரில் இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனம், ‘‘தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 6 முதல் 10 சதவீதம் வரை வட்டி தருவதாக 84 ஆயிரம் பேரிடம் சுமார் 5,900 கோடி ரூபாய் பணம் பெற்று’’ மோசடி செய்தது. இந்த நிறுவனத்தின் 10 இயக்குநர்கள், 3 முக்கிய ஏஜென்டுகள் என மொத்தம் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 இயக்குநர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 31 இடங்களில் நடந்த சோதனையில் ரூ1.12 கோடி ரொக்கம், ரூ34 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் 791 வங்கி கணக்குகளில் இருந்து ரூ121.54 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ12.23 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மோசடி வழக்கில் முக்கிய ஏஜெண்ட்களாக இருந்த சரவணகுமார், குப்புராஜ், ஜெகநாதன், ஞானசேகரன் ஆகியார் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த முக்கிய ஏஜென்டான அரிஹரன்(46) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 8ம் தேதி கைது செய்தனர்.

இவர், கடந்த 2020 மற்றும் 2022ம் ஆண்டுக்குள் சுமார் 600 பேரிடம் ரூ231 கோடி வரை பணம் பெற்று ஐஎஸ்எப் நிதி நிறுவனத்துக்கு கொடுத்துள்ளார். அதில் கமிஷனராக அரிஹரனுக்கு மட்டும் ஐஎஸ்எப் நிறுவனம் ரூ10 கோடி வழங்கியுள்ளது. இந்த பணத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆடம்பர வீடு, கோவையில் காலி மனை, விவசாய நிலம், சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளார். இதனால் அரிஹரனை மீண்டும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

The post ரூ5,900 கோடி மோசடி; ஐஎப்எஸ் நிதி நிறுவன ஏஜென்ட் அரிஹரன் கைது: ரூ231 கோடி பணம் ஏமாற்றினார் appeared first on Dinakaran.

Tags : IFS ,Ariharan ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட...