×

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி; தனுஷை தனது மகன் என்று கூறியவருக்கு உடல்நலக்குறைவு: மரபணுவை சேகரித்து பாதுகாக்க கோரி டீனிடம் மனு

மதுரை: நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி வழக்கு தொடர்ந்த கதிரேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டுமென மதுரை அரசு மருத்துவமனை டீனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷை தங்களது மகன் என்று கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று கதிரேசன் (70) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதுமை காரணமாக கதிரேசன் உடல் நிலை மோசமடைந்து வருவதால், வழக்கின் விசாரணைக்காக அவரது மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று கூறி கதிரேசன் மனைவி மீனாட்சி, மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளித்தார்.

இதுகுறித்து கதிரேசன் வக்கீல் டைட்டஸ் கூறும்போது, ‘‘கதிரேசனின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், அவரது டிஎன்ஏவை எடுத்து பராமரிக்க வேண்டும். ஏற்கனவே வழக்கு விசாரணையின்போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து இருந்தார். பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தவறாக தாக்கல் செய்திருந்தார். நடிகர் தனுஷின் உண்மையான பெற்றோர் கதிரேசன் – மீனாட்சி தம்பதிதான் என்பதை ஆவணங்கள் உறுதி செய்கிறது. இந்த தம்பதி மீது ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்வோம் என்று சொன்ன நடிகர் தனுஷ் இதுவரை வழக்கு தொடரவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார். இது ஒரு கதிரேசனின் பிரச்னை அல்ல. இப்படி எத்தனையோ பெற்றோர் தங்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்’’ என்றார்.

The post மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி; தனுஷை தனது மகன் என்று கூறியவருக்கு உடல்நலக்குறைவு: மரபணுவை சேகரித்து பாதுகாக்க கோரி டீனிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Madurai Government Hospital ,Dhanush ,Dean ,Madurai ,Kathiresan ,Dinakaran ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...