×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு; கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது ஒன்றியஅரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்று தரப்படுகின்றன. இந்நிலையில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடிதம் எழுதி பார்த்தனர். பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழக சட்டமன்றத்திலும் கலாஷேத்ரா கல்லூரியின் பாலியல் தொல்லை விவகாரம் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு அடையாறு அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், அவரது செல்போன் சிக்னலின் அடிப்படையில் வடசென்னையில் உள்ள நண்பரின் வீட்டில் ஹரி பத்மன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர் மீது பாலியல் தொல்லை கொடுத்தல், வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்பட நேரிடும் என்று வாதிட்டார். இதையடுத்து, ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு; கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Khalashetra ,Assistant Professor ,Haribadman ,Saithapet ,Chennai ,Haribathman ,Kaita Khalashetra ,Haribatman ,Dinakaran ,
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள...