×

கோயில் நகைகள் தங்க கட்டிகளாக மாற்றம்; வங்கியில் முதலீடு செய்த தங்க முதலீட்டு பத்திரம் ஒப்படைப்பு: நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் மற்றும் மாங்காடு காமாட்சியம்மன் கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுத்து உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதற்கான தங்க முதலீட்டுப் பத்திரங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் அறங்காவலர்களிடம் நேற்று வழங்கினார். இதில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு காணிக்கையாக வந்த 42 கிலோ 991 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மற்றும் மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு காணிக்கையாக வந்த 39 கிலோ 704 கிராம் எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றிடும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, பலமாற்று பொன் இனங்கள் மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்தத் தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ17.39 கோடி மற்றும் ரூ17.46 கோடி ஆகும். இதற்கான தங்க முதலீட்டு பத்திரங்களை நேற்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மூர்த்தி, மாங்காடு காமாட்சியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் மணலி சீனிவாசன் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த தங்க முதலீட்டு பத்திரத்தின் மூலம் ஆண்டிற்கு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு ரூ39.13 லட்சமும், மாங்காடு, காமாட்சியம்மன் கோயிலுக்கு ரூ39.92 லட்சமும் வட்டித் தொகையாக கிடைக்கும். அந்தந்த கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கோயில்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தர மோகன், கூடுதல் ஆணையர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கோயில் நகைகள் தங்க கட்டிகளாக மாற்றம்; வங்கியில் முதலீடு செய்த தங்க முதலீட்டு பத்திரம் ஒப்படைப்பு: நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chennai ,Commissioner ,Hindu Religious Charities ,Nungambakkam ,Thiruvekadu ,Devi Karumariyamman ,Mangadu Kamatshyamman ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி