×

மக்கள் நலப் பணியாளர்களை உச்சநீதிமன்ற ஆணைப்படி மீண்டும் பணியமர்த்த வேண்டும்: அன்புமணி

சென்னை : உச்சநீதிமன்ற ஆணைப்படி மக்கள்நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500க்கும் கூடுதலான மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். ஆட்சி மாறினாலும் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆட்சி மாற்றம் நிகழும் போது முந்தைய ஆட்சியின் முடிவுகளை மாற்றக்கூடாது என்பது தான் இந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் முக்கிய அறிவுரை ஆகும். உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரை இனி வரும் காலங்களில் அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தும் விஷயத்தில் அவர்களுக்கும் ஊதிய உயர்வு, பணி நீக்கப்பட்ட காலத்தையும் பணித்தொடர்ச்சியாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும் தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும். 2011-ஆம் ஆண்டில் பணி நீக்கப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களில் பலர் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்து விட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களில் ஒருவருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையையும் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Supreme Court ,Anbumani ,CHENNAI ,PAM ,Tamil Nadu government ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...