×

காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் காரைகள் பெயர்ந்து விழும் அபாயம்-நோயாளிகள் அச்சம்

காரைக்கால் : காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் காரைகள் பெயர்ந்து விழுவதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்காலில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுவது வழக்கம். மேலும் மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள அனைத்து சிகிச்சை பிரிவு கட்டிடங்களும் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடங்களாக இருப்பதால் சேதமடைந்தும், ஒரு சில கட்டிடங்களில் காரைகள் பெயர்ந்து நோயாளிகள் படுகைகளில் அவ்வபோது விழுந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் காயங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே காரைக்கால் அரசு மருத்துவமனையின் பிரதான சிகிச்சையாக திகழும் மகப்பேறு பிரிவு வெளிப்புற கட்டிடம் மற்றும் உட்புற சுவர்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் போது அப்போதைய நிலையை சமாளிக்க பெயர்ந்த காரை பகுதிகளை அகற்றிவிட்டு தரமற்ற சிமென்ட் கலவைகள் கொண்டு ஒட்டு போட்டு, வண்ணம் தீட்டி விட்டு விடுகின்றனர். பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே பகுதியில் சேதமடைவதும் தொடர் கதையாகி வருகிறது. மருத்துவமனை மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியும் சரியாக செலவிடாமல் திருப்பி அரசுக்கே அனுப்பும் அதிகாரிகளால் மருத்துவமனை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே பெரும் அசம்பாவிதம் நடைபெறும் முன்பே காரைக்கால் அரசு மருத்துவமனை முழுவதும் நிபுணர்கள் குழு கொண்டு கட்டிடங்களின் தரம், பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பாழடைந்த கட்டிடங்கள், சேதமடைந்த உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுக்கு மாற்றாக புதிய நவீன வசதிகளுடன் கூடிய உபகரணங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் அனைத்து சிகிச்சை பிரிவுகளுக்கும் நிரந்தரமாக துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்களை பணி அமர்த்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்தில் காரைகள் பெயர்ந்து விழும் அபாயம்-நோயாளிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Karaikal Govt Maternity Hospital ,Karaikal ,Karaikal Government Maternity Hospital ,Dinakaran ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...