×

பரம்பிக்குளம் வனப்பகுதியில் காட்டு யானையை விடுவிக்க எதிர்ப்பு: அனைத்துக்கட்சியினர், மக்கள் தர்ணா

பாலக்காடு, ஏப். 11: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலமடை கிராமப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட பரம்பிக்குளம் வனப்பகுதியில் அரிசி கொம்பன் என்ற காட்டு யானையை விடுவிக்கக்கூடாது என ஆலத்தூர் எம்.பி., ரம்யாஹரிதாஸ் தலைமையில் அனைத்துக்கட்சியினர் சார்பில் பொதுமக்கள் பரம்பிக்குளம் டி.எப்.ஓ., அலுவலகம் முன்பு தர்ணாப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரிசிகொம்பன் என்கிற காட்டுயானை வாட்ச்சர் உட்பட இரண்டுபேரையும் கொன்றது. இதையடுத்து காட்டுயானையை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மயக்கஊசி செலுத்தி பிடித்து அவற்றை பரம்பிக்குளம் வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் முயன்றனர். இதற்கு முதலமடை கிராமப்பஞ்சாயத்து மக்கள் எதிர்த்துப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆளும்கட்சி உட்பட அனைத்துக்கட்சியினரும் மக்களுக்காக ஆதரவு தெரிவித்தனர். யானையை பரம்பிக்குளம் வனத்தில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரம்பிக்குளம் ஆனைப்பாடியில் அமைந்துள்ள டி.எப்.ஓ., அலுவலகம் முன்பாக எம்.பி., ரம்யா ஹரிதாஸ் தலைமையில் முதலமடை கிராமப்பஞ்சாயத்து மக்களின் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது மக்கள் கூறுகையில்,பரம்பிக்குளத்திலும் ரேஷன்கடைகள், மளிகைக்கடைகள் உள்ளன. இங்கும் அதிகளவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரிசிகொம்பனை விட்டால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவர்கள். இவர்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும்.

மேலும் யானை, முதலமடை கிராமப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட காம்பரத்துச்சள்ளா, மீன்கரை, சுள்ளியாறு, நட்டன்கிழாய், கொல்லங்கோடு, செம்ணாம்பதி, எலவஞ்சேரி மற்றும் நெம்மாரா போத்துண்டி, நெல்லியாம்பதி ஆகிய காட்டுப்பகுதிகளுக்கு ஊடுருவி சென்று மக்களுக்கும், விளைச்சல் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், என்றனர். இதை வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் சார்பில் முதலமடை கிராமப்பஞ்சாயத்தில் இன்று 11ம் தேதி நடைபெறும் முழுகடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பொள்ளாச்சியிலிருந்து கோவிந்தாபும், செம்ணாம்பதி வழியாக கேரளா வருகின்ற வாகனங்களும், கொல்லங்ககோடு, திருச்சூர் ஆகிய இடங்களிலிருந்து கோவிந்தாபுரம், செம்ணாம்பதி வழியாக செல்கின்ற வாகனங்களும் செல்ல முடியாமல் தடை ஏற்படும்.

The post பரம்பிக்குளம் வனப்பகுதியில் காட்டு யானையை விடுவிக்க எதிர்ப்பு: அனைத்துக்கட்சியினர், மக்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Parambikulam forest ,Palakkad ,Arishi Komban ,Parambikulam ,Mulakadu district, ,Palakkad district, Kerala ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது