×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்சில் சீட் பிடிக்க பையை வீசிய பயணியிடம் 30 சவரன் அபேஸ்: சிசிடிவி பதிவு மூலம் ஆசாமி சிக்கினார்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பஸ்சில் சீட்டு பிடிப்பதற்காக பயணி வீசிய பையில் இருந்து 30 சவரனை அபகரித்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (31). இவர், அதே பகுதியில் நகை மற்றும் துணிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் எழுமலை (47). இவர் விக்னேஷிடம் கார் டிரைவராக உள்ளார். தங்க நகைகளை லேசர் கட்டிங் செய்வதற்கு தினமும் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள கடைக்கு ஏழுமலை காரில் வந்து தங்க நகைகளை சரி செய்துவிட்டு செல்வது வழக்கம்.

அதன்படி, கடந்த 6ம் தேதி, ஏழுமலை 30.5 சவரன் தங்க நகைகளை லேசர் கட்டிங் செய்ய, செய்யாறில் இருந்து பேருந்து மூலம் சென்னை சவுகார்பேட்டைக்கு கொண்டு வந்தார். பின்னர், லேசர் கட்டிங் செய்த நகைகள் அனைத்தையும் ஒரு மஞ்ச பையில் எடுத்துகொண்டு செய்யாறு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். வழியில் மது அருந்தியுள்ளார். பின்னர் கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ்சில் ஏற முயன்றபோது, கூட்ட நெரிசலாக இருந்துள்ளது. இதனால், தன்னிடம் இருந்த நகைப்பையை ஜன்னல் வழியாக தூக்கி வீசி இடம் பிடித்துள்ளார். பின்னர், சாவகாசமாக பஸ்சில் ஏறி, சீட்டில் உட்கார்ந்துள்ளார்.

இதன்பிறகு, திருவண்ணாமலை சென்ற பிறகுதான், கையில் வைத்திருந்த மஞ்சள் பை காணாமல் போனது தெரிய வந்தது. உடனடியாக விக்னேசுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், கடந்த 7ம் தேதி மாலை, கோயம்பேடு காவல் நிலையத்திற்கு ஏழுமலையுடன் வந்து புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையிடம் விசாரணை நடத்தினர். பின்னர், குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒருவர் நகை பையை எடுத்து கொண்டு பைக்கில் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, நீலாங்கரையை சேர்ந்த சந்திரசேகர் (47) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்று, பீரோவில் பதுக்கி வைத்திருந்த 30.5 சவரன் தங்க நகையை போலீசார் கைப்பற்றினர். பின்னர், இதுபற்றி வழக்குபதிவு செய்து, சந்திரசேகரை நேற்று முன்தினம் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சந்திரசேகர் உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வருவது தெரிந்ததால், அவரின் உடல்நிலையை காரணம் காட்டி, காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், அவரை விடுவித்த போலீசார், 30.5 சவரனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் விக்னேஷிடம், உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் காட்டி நகையை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ்சில் சீட் பிடிக்க பையை வீசிய பயணியிடம் 30 சவரன் அபேஸ்: சிசிடிவி பதிவு மூலம் ஆசாமி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Koyambedu bus station ,Annanagar ,Asami ,
× RELATED கேட்பாரற்று கிடந்த பார்சலுக்கு...