×

கடற்கரை ரோந்து மற்றும் மீட்பு இழுவை வாகன சேவை தொடக்கம் ரூ.20 கோடியில் 12 தீயணைப்பு நிலையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கடற்கரை ரோந்து மற்றும் மீட்பு இழுவை வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்து, ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தீயணைப்பு துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் அமைத்தல், பணியாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டுதல், புதிய வாகனங்களை கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் சேலம் ஆட்டையாம்பட்டி, திருப்பூர் ஊத்துக்குளி, சிவகங்கை இளையான்குடி, திருச்சி வையம்பட்டி, கடலூர் குமராட்சி, கள்ளக்குறிச்சி நயினார்பாளையம், விழுப்புரம் அன்னியூர், மதுரை திருப்பரங்குன்றம், விருதுநகர் ஏழாயிரம்பண்ணை, சென்னை கொளத்தூர், செங்கல்பட்டு காலவாக்கம், திருவண்ணாமலை கண்ணமங்கலம் ஆகிய 12 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள் மற்றும் விருதுநகர் சிவகாசி, ராணிப்பேட்டை, தாம்பரம், ஓசூர் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களை தரம் உயர்த்தி, மொத்தம் 20 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திட்டங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

மேலும், சென்னை காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்துள்ளார். மேலும், சாலைப்பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக சென்னை காவல் துறைக்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 5 புதிய நான்கு சக்கர மீட்பு இழுவை வாகனங்களும், 5 புதிய இருசக்கர மீட்பு இழுவை வாகனங்களும் என மொத்தம் 10 மீட்பு இழுவை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடற்கரை ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய கடற்கரை ரோந்து வாகனங்கள் சென்னை காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 வாகனங்கள் சுற்றுக் காவல் பணிக்கும், ஒரு வாகனம் சுற்றுக் காவல் மற்றும் கடல் அலைகளில் சிக்கிக்கொண்டவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு துரிதமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லக் கூடிய பணிக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், , தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை கொளத்தூர், செங்கல்பட்டு காலவாக்கம், திருவண்ணாமலை கண்ணமங்கலம் ஆகிய 12 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள்.

The post கடற்கரை ரோந்து மற்றும் மீட்பு இழுவை வாகன சேவை தொடக்கம் ரூ.20 கோடியில் 12 தீயணைப்பு நிலையங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,patrol ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...