×

தாம்பரம் அருகே பரபரப்பு; இறைச்சி கடை உரிமையாளரின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 பேருக்கு வலை

சோழிங்கநல்லூர்: தாம்பரம் அருகே பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (45). இவர் தனது வீட்டருகே இறைச்சி கடை நடத்தி வருகிறார். அன்சாரி தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில், திடீரென இவரது வீட்டின் முன்பு பயங்கர வெடி சத்தம் கேட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அன்சாரி மற்றும் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் அலறியடித்தவாறு எழுந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது, அன்சாரியின் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அன்சாரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். அதற்குள் காரின் முன் பகுதி தீயில் எரிந்து சேதமானது. தகவலறிந்த, பள்ளிக்கரணை துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை காரின் மீது வீசிவிட்டு தப்பி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், சம்பவ இடத்தில் சிதறிய கிடந்த நாட்டு வெடி குண்டுகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நாட்டு வெடிகுண்டை வீசிய மர்ம் நபர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், முன்விரோதம் காரணமாக அன்சாரி கார் மீது வெடிகுண்டை வீசினார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா, என பல கோணங்களில், பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா தலைமையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தாம்பரம் அருகே பரபரப்பு; இறைச்சி கடை உரிமையாளரின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Bustle ,Tambaram ,Chozhinganallur ,Ansari ,Thiruvalluvar Nagar ,Jalladianpet ,Pallikarana ,
× RELATED செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம்...