×

எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப். 10:கோவை உக்கடத்தில் வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின்போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்தும், கர்நாடகாவில் மாடுகளை ஏற்றிச்சென்ற இத்ரீஸ் பாஷா கொல்லப்பட்டதை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது இரு மதப்பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. சசாராம் பகுதியில் இரு தரப்பினரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். அதையடுத்து மாநிலத்தின் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும், சில தினங்களுக்கு முன் சாந்தனூர் காவல் நிலையம் அருகே மாடுகளை ஏற்றி சென்ற போது பசு பாதுகாப்புக்குழு என்ற கும்பல் இத்ரீஸ் பாஷா உட்பட சிலர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இத்ரீஸ் பாஷா உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்களை கண்டித்தும், இந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கோவை மத்திய மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முகமது இக்பால் தலைமை வகித்தார்.

மத்திய மாவட்ட துணைதலைவர் அப்துல் ரஹிம் வரவேற்றார். இதில், மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்காதர், வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல்கரீம், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஹசன் பாதுஷா, தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகம்மது முஸ்தபா, விமன் இந்தியா மூவ்மென்ட் மாவட்ட தலைவி காமிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சானவாஸ் தலைமை உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பெண்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

The post எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI ,Coimbatore ,Ramnavami procession ,Ukkadam ,Idrees ,Karnataka ,STBI party ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்