×

90 ஆயிரம் டன் மாங்காய் அறுவடைக்கு இலக்கு

தர்மபுரி ஏப்.9: தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 90 ஆயிரம் டன் மாங்காய் அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் மாங்காய் அறுவடை தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர் ஒன்றியங்களில் அதிகளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி மற்றும் பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய வட்டாரத்திலும் மா சாகுபடி செய்துள்ளனர். செந்தூரா, அல்போன்சா, பெங்களூரா, நீலம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவநிலைக்கு ஏற்ப மா உற்பத்தி திறன் மாறுபடும். இதனால், மா உற்பத்தி சாராசரி நிலையை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 10 மாங்கூழ் தயாரிக்கும் சிறிய ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் ஈரான், ஈராக், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நவம்பர் கடைசியில் துவங்கி, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியது. தற்போது, காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

மா பூ பிடித்தபோது, மாவட்டத்தில் பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தது. மாம்பூக்கள் உதிர்வதை தடுக்கவும், அதிக மகசூல் பெறவும், தர்மபுரி மாவட்ட தோட்டக்கலைத்துறை மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், மா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். கோடை காலம் தொடங்கியதால், வெயில் மற்றும் கோடை மழையில் மாம்பிஞ்சுகள் உதிர்ந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஒருசில இடங்களில் அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், மாங்காயின் அறுவடை சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. அப்போது, அறுவடை செய்யப்படும் மாங்காய்கள் முற்றிய நிலையில், ருசியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியில், மாமரங்களில் அதிகமாக பூ பிடித்து காய் பிடித்துள்ளது. ஒருசில இடத்தில் சராசரியாக பூ பூத்து காய் பிடித்துள்ளது. கோடை வெயில், கோடை மழை, அனல் காற்றில் பூக்கள் உதிராமல் காப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் மாம்பிஞ்சு வளரும் பருவத்தில், வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனையுடன் தரமான மருந்துகளை தெளித்து கூடுதல் மகசூல் பெற வேண்டும். பெங்களூரா ரகங்கள் பெரும்பாலும் மாங்கூழ் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு செல்கிறது,’ என்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வெப்ப மண்டலமான தர்மபுரி மாவட்டத்தில் மா சாகுடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மா சாகுபடியை பொறுத்த வரை, ஓராண்டு உற்பத்தி குறைந்தால், அடுத்தாண்டு அதிக உற்பத்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, நடப்பாண்டு அதிக மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். ஒரு மரத்தில் 10 முதல் 50 கிலோ வரை மாங்காய் அறுவடை செய்யப்படுகிறது. நடப்பாண்டு 90 ஆயிரம் டன் மாங்காய் மற்றும் மாம்பழம் அறுவடை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருசில விவசாயிகள், ரசாயன தொழில்நுட்பத்தில் முன்னதாகவே செயற்கையாக பூ பூக்க வைத்து, பிஞ்சு பிடிக்க செய்து, மாங்காயை பழுக்க வைத்து சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இது இயற்கைக்கு மாறானது,’ என்றனர்.

The post 90 ஆயிரம் டன் மாங்காய் அறுவடைக்கு இலக்கு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்