×

10ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி மருத்துவர்கள் 2 பேர் பிடிபட்டனர்

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை மற்றும் சிப்காட் பகுதிகளில் இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் ஸ்டேஷன் ெபயிலில் அனுப்பப்பட்டனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பஜார், எளாவூர், கவரப்பேட்டை, பூவலம்பேடு, மாதர்பாக்கம், பாதிரிவேடு, சுண்ணாம்பு குளம் ஆகிய பகுதிகளில், 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலியாக கிளினிக் நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சிபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில், நேற்று கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி, மருத்துவக் குழு ஹரிப்ரியா ஆகியோர் தலைமையிலான குழு கவரப்பேட்டை மற்றும் சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை

செய்தனர். கவரப்பேட்டை ராஜா பகுதியில் சென்னையை சேர்ந்த ஞானசுந்தரி (46) என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். அங்கு சென்ற மருத்துவ குழு திடீர் சோதனை நடத்தினர். அங்கு, வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது கொடுக்கப்பட்ட மருந்து, மாத்திரை, போடப்பட்ட ஊசி ஆகியவற்றை கண்காணித்தனர். பின்னர், ஞானசுந்தரியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த மருத்துவ குழு கேட்ட ஆவணங்கள் அவரிடம் இல்லாததும், அவர் போலி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடந்து, கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதேபோல், சிப்காட்டில் உள்ள எளாவூர் காட்டுகொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்(31). மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். அந்த கடையிலேயே மருத்துவ உபகரணங்களை வைத்து மருத்துவர் போல் சிகிச்சை அளித்தும் வந்துள்ளார். அவரிடமும் இந்த மருத்துவ குழவினர் விசாரணை நடத்தினர். இதில் அவரும் போலி மருத்துவர் என உறுதியானது. இதனை அடுத்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து இவரையும் கைது செய்தனர். மேற்கண்ட இருவரையும் டிஎஸ்பி மற்றும் மருத்துவ குழு அலுவலர் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் இருவரும் சித்தா மருத்துவம் படித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஸ்டேஷன் ெபயிலில் இருவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

The post 10ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி மருத்துவர்கள் 2 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Kavarappettai ,Chipgat ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...