×

சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் குடிசைகளை அகற்றும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

ஆலந்தூர்: சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் குடிசைகளை அகற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டிற்கான அலுவல் ஆய்வுக் கூட்டம் சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 139, 140, 142, 168, 169, 170, 172 என 7 வார்டுகளில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை நடந்து முடிந்த திட்டப் பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்தார். முடிவடையாத பணிகளை விரைந்து முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அப்போது அதிகாரிகள், கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் சிறப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், 168வது வார்டில் உள்ள 13 பூங்காக்கள் பராமரிக்கபட உள்ளதாகவும், ரேஷன்கடைகள், மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி சீரமைக்கும் பணி நடந்துவருவதாகவும் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சைதாப்பேட்டை, கோதாமேடு ஆற்றங்கரையோர குடிசைகளை அகற்ற வேண்டியுள்ளது என்றனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித்துறையினர் ஆற்றங்கரையோர குடிசைகளை ஓரளவிற்கு அகற்றிவிட்டனர். மீண்டும் அப்பகுதியில் குடிசைகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தர், சுப்பிரமணி, மோகன்குமார் உள்பட பலரும் கலந்துகொண்டனர்

The post சைதாப்பேட்டை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் குடிசைகளை அகற்றும் முடிவை அதிகாரிகள் கைவிட வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Saithapet ,Minister ,Ma. Subramanian ,Alandur ,PTI ,Ma'am ,Supramanian ,Dinakaran ,
× RELATED சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள்...