×
Saravana Stores

கருப்பு பலூன் பறக்க விட திட்டமிட்ட காங்கிரசாருக்கு வீட்டு காவல்; பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி தலைமையில் கருப்பு சட்டையில் திரண்ட காங்கிரசார்

சென்னை: கருப்பு பலூன் பறக்க விட திட்டமிட்ட காங்கிரசாரை நேற்று இரவு முதல் வீட்டு காவலில் வைத்த நிலையில், இன்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இதில் கருப்பு சட்டை அணிந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். இவர் இரவு 7.45 மணி வரை சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலாவதாக, ரூ.2,467 கோடி மதிப்பில் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மேலும் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோன்று தமிழ்நாட்டில் பிற ரயில் சேவை மற்றும் சாலை திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கருப்பு கொடி காட்ட முடிவு செய்திருந்தது. இதுபற்றி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து அடுத்த 24 மணிநேரத்தில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்க நடவடிக்கையை கண்டித்து தான் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது என முடிவெடுத்தனர். அதன்படி, போலீசாரின் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் மக்களோடு மக்களாக நின்று கருப்பு கொடி காட்டி கோஷமிட்டு போராட்டம் நடத்த வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு இரும்புகோட்டை போன்று பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில்,நேற்று இரவு முதல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது வருகையின் போது கருப்பு லட்சக்கணக்கான கருப்பு பலுன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரசார் சிலர் திட்டமிட்டிருந்தனர். இதனால், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், அடையாறு துரை, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் நேற்று இரவு முதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்த பாஜகவின் ஜனநாயக படுகொலையை கண்டிக்கிற வகையில் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று காலை முதல் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்கு வீட்டு காவலில் வைக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் போலீசார் அனுமதி வழங்கினர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதே போன்று, ஆர்ப்பாட்டத்துக்கு வந்த காங்கிரசார் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத், துணை தலைவர் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், அடையார் துரை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் அங்கிருந்து வெளியில் செல்ல முடியாத அளவுக்கு பேரி கார்டுகள் அமைத்து போலீசார் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியதும், திரும்பி போ.. திரும்பி போ.. பிரதமர் மோடியே திரும்பி போ… என்று ஒரே குரலாக காங்கிரசார் கோஷமிட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அருகில் இருக்கும் திருமணத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கருப்பு பலூன் பறக்க விட திட்டமிட்ட காங்கிரசாருக்கு வீட்டு காவல்; பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி தலைமையில் கருப்பு சட்டையில் திரண்ட காங்கிரசார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,K.K. S.S. ,analakiri ,Chennai ,House Guard ,Congress ,Dinakaran ,Anakiri ,
× RELATED நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச...