×

மாஜி அமைச்சரை கழற்றி விட சேலம்காரர் திட்டம் போட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கல்தா கொடுக்க சேலத்துக்காரர் முடிவு செய்ததால் அதிர்ச்சியில் இருக்காராமே மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை ஆட்சி காலத்தில் கடலோர மாவட்டத்தில் கொடிகட்டி பறந்த மாஜி அமைச்சர் மில்க் பெயர் கொண்டவரானவர் ஆரம்பத்தில் தேனிக்காரர் அணியில் இருந்து வந்தார். திடீரென அவர், சேலத்துகாரர் அணியில் ஐக்கியமானார். தொடர்ந்து, மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என எதிலும் கலந்து கொள்வது இல்லையாம். ஒதுங்கியே தான் இருந்து வந்தாராம். இப்போது திடீரென ‘மணியானவர்’ தலைமையில் நடைபெறும் அனைத்து, கட்சி நிகழ்ச்சிகளிலும் மில்க் பெயரை கொண்டவர் கலந்து கொள்கிறராம். இதில் சந்தேகம் அடைந்த ‘மணியானவர்’, தனது ஆதரவாளர்களிடம் ரகசியமாக விசாரிக்க சொன்னராம். அதன்படி மில்கின் விசுவாசிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள், மணியானவரின் செயல்பாடுகள் தான் எதுவுமே சரியில்லை என மேலிடம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, ‘மில்க்’ பெயர் கொண்டவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. இதனால் தான் அவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார் என தெரியவந்ததாம். இந்த தகவலை ‘மணியானவர்’ கவனத்துக்கு அவரது ஆதரவாளர்கள் உடனடியாக கொண்டு சென்றனர். இதை கேட்டதிலிருந்து அவர் அதிர்ச்சியில் இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ப்ளையிங் ஸ்கோட், வசூல்ல கலக்குதுனு புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஆறு கொண்ட ஊர் இருக்குது. இந்த ஊர்ல அடிக்கடி கமர்சியல் டிபார்ட்மெண்ட் ப்ளையிங் ஸ்கோட் டீம் சுற்றி, சுற்றி வர்றாங்களாம். பராவயில்ல, சுற்றி, சுற்றி ரெய்டு நடத்தி அதிகாரிங்க நடவடிக்கை எடுக்குறாங்கன்னு பப்ளிக்கும் நினைச்சிருக்காங்க. ஆனா அவங்க ரெய்டு நடத்துறது, தப்ப தடுக்குறதுக்கு இல்லையாம். தப்பு செய்றவங்ககிட்ட இருந்து வசூல் நடத்துறதுக்குதான்னு இப்ப வெளிச்சத்துக்கு வந்திருக்குது. 2 நாளைக்கு முன்னாடி பொன்னான ஏரியாவுல இரும்பு கம்பி ஏற்றி வந்த ஒரு லாரியை பிடிச்சு லகரத்துல வசூல் நடத்திட்டாங்களாம். இப்படி சரக்கு லாரிகள்ல சோதனையிட்டு ஏகத்துக்கும் வசூல் நடக்குதாம். அபராதம் என்ற பெயர்ல வசூலிக்குறாங்களாம். ஆனா பில் கொடுக்குறதே இல்லையாம். அரசுக்கு சேரவேண்டிய அபராதங்கள், இப்படி சில அதிகாரிகளுக்கு போய் சேருதாம். சந்தேகம் வராம இருக்குறதுக்கு ஏதோ ஒன்னு ரெண்டு அபராதம் விதிச்சு அரசுக்கு கணக்கு காட்டுறாங்களாம். இதனால, தப்பு செய்ற அதிகாரிகளை கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்கணும். அதோட நேர்மையான அதிகாரிகளை நியமிச்சு, விதிமீறும் சரக்கு வாகனங்கள் மீதும் நடவடிக்ைக எடுக்கணும்னு கோரிக்கை குரல் எழுந்திருக்குது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூங்கா நகரில் நகர், புறநகர் பொறுப்பில் 2 இலைக்கட்சி மாஜி மந்திரிகள் உள்ளனர். வெளிப்பார்வைக்கு இருவரும் இயல்பாக பழகுவது போல தெரிந்தாலும், இவர்களுக்குள் எப்போதுமே ஏழாம் பொருத்தம். புறநகரில் உள்ள உதயமானவர் தலைமையிடம் ஓவர் விசுவாசம் காட்டி, அவரது குட்புக்கில் இடம் பிடித்துள்ளார். மேலும், தென்மாவட்டத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, இவரை முன்னிறுத்தி வந்தார் சேலத்துக்காரர். ஆனால், இவரோ சேலத்துக்காரர் வந்தால், போஸ்டர், பிளக்ஸ், அலங்கார வளைவுகள் வைப்பது என அவரை குளிர்விப்பதிலேயே குறியாக இருக்கிறார். மறுபுறம் தெர்மோகோல் மாஜி மந்திரி, அவ்வப்போது தாமரைக்கட்சிக்கு சூடு தரும் விதத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். கட்சியை எங்கும் விட்டுத் தராமல் இவர் பேசி வருவதற்கு, தூங்காநகர் இலைக்கட்சி தொண்டர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அதேநேரம் உதயமானவரோ, தாமரை கட்சியை பற்றி விமர்சிப்பதே இல்லையாம். மேலும், இவருக்கு தேனிக்காரர் தரப்பை அட்டாக் செய்வதற்கான பொறுப்புகளை சேலத்துக்காரர் வழங்கியுள்ளார். அதில், இவரது செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லையென சேலத்துக்காரர் வருத்தத்தில் உள்ளாராம். அதே நேரம் தெர்மோகோல் மாஜி மந்திரிக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் இலைக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா, முத்து மாவட்ட இலை கட்சியினர் விரக்தியோடு இருக்க காரணம் என்னவாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரர் பொதுச்செயலாளர் பதவியை பிடித்து விட்டார். ஆனாலும் தேசிய கட்சிக்கு பீடிகை போடுவதை இலை கட்சியினர் யாரும் ரசிக்கவில்லையாம். சேலம்காரர் தேசிய கட்சியுடன்தான் கூட்டணி என அறிவித்த போதிலும், தேசிய கட்சியின் மலையானவர் மக்களவை தேர்தலில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று இலை கட்சியினரை தொடர்ந்து வம்புக்கு இழுத்து வருகிறார். நமது முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு இப்படி மலையானவர் சவால் விடுகிறாரே, ஒற்றை இலக்க சதவீதத்தில் ஓட்டு வைத்திருக்கும் இவர்களால் கடந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் ஆவது வெற்றி பெற முடிந்ததா என அல்வா, முத்து மாவட்டங்களைச் சேர்ந்த இலை கட்சியினர் விரக்தியோடு கேள்வி எழுப்புகின்றனர். முத்து மாவட்ட தொகுதியில் கடந்த முறை தேசிய கட்சி போட்டியிட்டு மண்ணை கவ்வியதாம். எங்கே தொகுதி பங்கீடு என்று வரும்போது, நம்ம தொகுதி அவர்கள் கைக்கு போய் விடுமோ என்ற அச்சம்தான் இலை கட்சியினரை ஆட்டுவிக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இரண்டு எம்எல்ஏக்கள் மீது மாஜி விஐபி செம கோபத்தில் உள்ளாராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவையில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவுக்கு ஆட்கள் பிடித்து வரும் வேலை, மாவட்டம் முழுவதும் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களில், 7 பேர் வாங்கிய பணத்துக்கு… அவரவர் பங்கிற்கு ஆட்களை பிடித்து வந்து விட்டார்களாம். ஆனால், இரண்டு எம்எல்ஏக்கள் மட்டும் தங்களது வேலையை காட்டி விட்டார்களாம்.. அத்துடன், விழா மேடையில் கெத்து காட்டிக்கொண்டு இருந்தார்களாம். இதை கவனித்த மாஜி முதல்வர், தனக்கு நெருக்கமான நபரிடம் இதுபற்றி தகவல் கேட்டுள்ளார். அப்போது, இரு சட்டமன்ற உறுப்பினர்களும் பணத்தை ஆட்டையைப்போட்டு விட்டார்கள் என தெரியவந்தது. இதனால், கோபம் அடைந்த மாஜி, அந்த இரு எம்எல்ஏ.க்களையும் சென்னைக்கு வந்து, என்னை தனியாக சந்திக்க சொல்லவும் என ஆர்டர் போட்டுள்ளார். இவர்கள் இருவரும் சட்டமன்றத்தில் ஆக்ரோஷமாக பேசாமல், பொம்மைபோல் செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற பல காரணங்களுக்காக, இருவருக்கும் `கவனிப்பு’ செம வலுவாக இருக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால், இரு சமஉ-க்களும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.

The post மாஜி அமைச்சரை கழற்றி விட சேலம்காரர் திட்டம் போட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,Salemkar ,wiki ,Minister ,Saletukkar ,Kalta ,Peter ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்