×

க்ருணால், பிஷ்னோய், அமித் அபார பந்துவீச்சு லக்னோவுக்கு எளிய இலக்கு

லக்னோ: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு 122 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அன்மோல்பிரீத் சிங், மயாங்க் அகர்வால் இருவரும் ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். மயாங்க் 8 ரன் எடுத்து க்ருணால் பாண்டியா சுழலில் ஸ்டாய்னிஸ் வசம் பிடிபட்டார். அடுத்து அன்மோல்பிரீத்துடன் ராகுல் திரிபாதி இணைந்தார்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்தனர். அன்மோல்பிரீத் 31 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து, க்ருணால் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரம் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். ஹாரி புரூக் 3 ரன் எடுத்து ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட, ஐதராபாத் 9 ஓவரில் 55 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ராகுல் திரிபாதி – வாஷிங்டன் சுந்தர் ஜோடி கடுமையாகப் போராடி 39 ரன் சேர்த்தது. திரிபாதி 34 ரன் (41 பந்து, 4 பவுண்டரி), வாஷிங்டன் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

அடில் ரஷித் 4 ரன் எடுத்து அமித் மிஷ்ரா சுழலில் ஹூடா வசம் பிடிபட்டார். உம்ரான் மாலிக் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் அப்துல் சமத் அதிரடியாக 2 சிக்சர்களை தூக்கி அசத்த, ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. அப்துல் சமத் 21 ரன் (10 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), புவனேஷ்வர் குமார் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட், அமித் மிஷ்ரா 2, யஷ் தாகூர், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 122 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.

The post க்ருணால், பிஷ்னோய், அமித் அபார பந்துவீச்சு லக்னோவுக்கு எளிய இலக்கு appeared first on Dinakaran.

Tags : Krunal ,Bishnoi ,Amit ,Lucknow ,IPL league ,Sunrisers Hyderabad ,Lucknow Supergiants ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!