×

திருக்கோயில் திருவிழாக்களின் போது மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்

சென்னை: 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் மற்றும் திருக்கோயில் திருவிழாக்களின் போது மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர்
சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (07.04.2023) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் உயர் அலுவலர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்படவேண்டிய புதிய அறிவிப்புகள் குறித்தும், திருக்கோயில்களின் திருவிழாக்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கோடை வெயிலிருந்து பக்தர்களை காத்திடும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி வழங்குதல் குறித்தும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

திருக்கோயில்களின் குடமுழுக்கு, தேர்த் திருவிழா, தெப்பத் திருவிழா மற்றும் தீர்த்தவாரி விழாக்களின் போது மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடித்தல், இப்பணிகள் தொடர்பாக காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட இதரத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளுதல்,

தீ விபத்துகள் ஏற்படாத வண்ணம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல், திருக்கோயில்களின் கருவறை, பிரகாரங்கள், மடப்பள்ளி, நந்தவனங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மையை பேணுதல், கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன் காக்கும் வகையில் திருக்கோயில்களில் தேங்காய் நார் தரைவிரிப்புகள், பிரகார நடைபாதைகளில் குளிரூட்டும் வெள்ளை வண்ணப் பூச்சு பூசுதல் மற்றும் பந்தல்கள் அமைத்தல், பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், மோர், பானகம் போன்றவற்றை தடையில்லாமல் வழங்குதல் ஆகியவை குறித்தும்,

அன்னதானம், பிரசாதம் மற்றும் திருக்கோயில்களின் பிரசாத விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்தல், திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகள். கால்நடைகள் ஆகியவற்றிற்கு கோடை காலத்திற்கு ஏற்ற உணவு, மருத்துவ வசதி வழங்கப்படுவதை உறுதி செய்தல், அவை தங்குவதற்கான கொட்டகைகளில் தூய்மையையும், தேவையான வசதிகளையும் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விரிவாக கலந்தாலோசித்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் சு.ரெகுநாதன், இணை ஆணையர்கள், அர.சுதர்சன், பொ.ஜெயராமன், ஆர்.செந்தில் வேலவன், முனைவர் ந.தனபால், கே.ரேணுகாதேவி, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்கோயில் திருவிழாக்களின் போது மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Seagarbabu ,Tirukkoil ,Chennai ,Thirukhoil ,Seagarabu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...