×

உடுமலை-மூணார் சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலைகள் புலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, மான்கள், உடும்பு, முயல், பாம்பு என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது, கோடை காலம் துவங்கி உள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், சுனை, தடுப்பணை அனைத்தும் வற்ற தொடங்கி உள்ளன.

மேலும், வனப்பகுதி பசுமை இழந்து செடி, கொடிகள் அனைத்தும் இலைகளை உதிர்த்து மொட்டையாக காட்சி அளிக்கின்றன. தொடர் வறட்சி காரணமாக, தாவர உண்ணிகள் இரை மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர துவங்கி உள்ளன. குறிப்பாக, யானை போன்ற பெரிய விலங்குகளுக்கு போதுமான இரை மற்றும் தண்ணீர் கிடைக்காத நிலையில் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக அமராவதி அணை நோக்கி படையெடுத்து வருகின்றன. அணையின் கரைகளில் வளர்ந்துள்ள புல்களை மேய்வதோடு விடிய, விடிய அணையில் இறங்கி தண்ணீர் பருகியும், உற்சாகமாக விளையாடியும் வருகின்றன.

உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் நோக்கி செல்லும் சாலையில் 9/6 செக்போஸ்ட், ஏழுமலையான் கோயில் பிரிவு, காமனூத்து பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் சாலையை கடந்து அமராவதி அணை நோக்கி செல்கின்றன. மாலை வேளைகளில் யானைகள் அவ்வப்போது சாலையோரம் முகாமிட்டும், சாலையை மறித்து கொண்டும் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் முக்கிய வழித்தடமான உடுமலை- மூணார் சாலையில் சுற்றுலா வாகனங்கள், கேரள மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கறிக்கோழி, முட்டை, கட்டுமான பொருட்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் வாகனங்கள் யானைகள் சாலையை வழிமறித்து நிற்பதால் ஸ்தம்பித்து நிற்கின்றன.

பட்டப்பகலில் யானைகள் சாலையோரம் நிற்பதால் வெளியூர் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர். நேற்று ஒற்றை காட்டுயானை உடுமலை- மூணார் சாலையில் வெகுநேரம் சாலையை மறித்து நின்றதோடு, லாரி ஒன்றினை தாக்க முயன்றது. லாரி ஓட்டுனர் லாரியை வேகமாக பின்னோக்கி செலுத்தியதால் யானை சற்றே அமைதியாகியது. 20 நிமிடத்திற்கும் மேலாக லாரி செல்ல முடியாதபடி சாலையை மறித்தபடி நின்ற ஒற்றை யானை பின்னர், தானாகவே சாலையை விட்டு இறங்கி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

The post உடுமலை-மூணார் சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Udumalay-Moonar Road ,Udumalai ,Western Ghillside ,Udumalai district ,Tiruppur district ,Ananimalayas Tigers ,Amravati ,Colomam ,Udumalay-Mundar Road ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு