×

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக புலம்பி வரும் தாமரை நிர்வாகிகளின் கூட்டணி வியூகத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கூட இருந்தாவே, ஒன்னும் செய்யமாட்டாங்க என்ற சூழலில், எதிர்த்து போட்டியிட வைத்து ஒன்றும் இல்லாமல் செய்துட்டாங்களேனு புலம்புறாங்களாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தொண்டைமான் மாவட்டத்தில் 49 பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இதுலதான் டிவிஸ்ட்டே ஆரம்பம். உள்ளாட்சி தேர்தலில், இலை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து, தாமரை கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாங்களாம். இதனால், தொண்டைமான் மாவட்டத்தில் கூட்டணிக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டதாம். தாமரை கட்சியின் இந்த மேலிட தில்லாலங்கடி இலைகட்சி மேலிடத்துக்கு லேட்டாக தான் தெரிந்ததாம். இதனால, தாமரை கட்சி மாவட்ட நிர்வாகிகள் மீது இலை கட்சி கடும் அதிருப்தியில் இருந்ததாம். இலை கட்சி வேட்பாளர்களுக்காக முக்கிய நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்தார்களாம். ஆனால். தாமரை கட்சி வேட்பாளர்களுக்காக யாரும் பிரசாரம் செய்யலையாம். தாமரை கட்சி நிர்வாகிகள் சொன்னதால் தான் இலைகட்சியை எதிர்த்து போட்டியிட்டோம். ஆனால், கடைசி வரைக்கும் யாருமே பிரசாரம் செய்ய வரவில்லை. கடைசியில் இலை கட்சி வேட்பாளர்கள் மத்தியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம் என தேர்தல் முடிந்தும் நிர்வாகிகள் புலம்பி வர்றாங்களாம். அண்ணன் தம்பியாக பழகி வந்தவங்களை, துரோகிகளை பார்க்கிற மாதிரி பார்க்க வச்சுட்டாங்க. இதுதொடர்பாக தாமரை கட்சி மாநில நிர்வாகிகளிடம் புகார் சென்றதாம். மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் கட்சியை விட்டு வெளியேறி விடுவோம். இது நடக்காவிட்டால் புதுக்கோட்டை மாவட்டத்துல தாமரைக்கு பதிலாக, முல்லை, கனகாம்பரம், அள்ளி மலர்கள்தான் மலரும்னு நக்கல் அடிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தப்பான வழியில் போய் வேலையில் சேர்ந்தால்… இவர்களை மாதிரி தான் மற்றவர்களின் அவஸ்தையும் இருக்கும்போல…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியில நடந்த முறைகேடான நியமனங்கள், சமீபத்துல விஜிலென்ஸ் பதிவு செஞ்ச வழக்கால உறுதியாகியிருக்கு. முறைகேட்டுல ஈடுபட்டதா மாஜி விசி, ரிஜிஸ்திரார் மேல பல பிரிவுகள்ல வழக்குப்பதிவு பண்ணியிருக்காங்க. இதனால, வேலை பெற்றவங்களோட நிலைமை கேள்விக்குறியாகி இருக்கு. அதேசமயம், தகுதியில்லாமலும், போலி சான்றிதழ் மூலமாவும் சேர்ந்த இவங்கள, ஒட்டுமொத்தமாக வேலைய விட்டு அனுப்பனும்னு பல்வேறு தரப்புல இருந்தும் கோரிக்கை வந்திருக்காம். இந்த பட்டியல்ல மாஜி கன்ட்ரோலர், உறுப்பு கல்லூரி பிரின்சிபல்னு பெரிய பொறுப்பு அதிகாரிங்க பலர் இருக்காங்க. இவங்க சேர்ந்ததுல இருந்து லட்சக்கணக்குல சம்பளமும் வாங்கியிருக்காங்க. ஏற்கனவே, ஆடிட் அப்ஜக்ஷன்ல பல முறை குட்டு வச்சும் இவங்க யாரும் கண்டுக்கல. இப்போது மொத்த வேலையும் பறிபோகும்னு தகவல் வெளிவர்றதால என்ன செய்யுறதுனு தெரியாம புலம்பி தவிக்குறாங்களாம். அதே சமயம், யார் மூலமா, எப்படி கவனிச்சு வேலைய வாங்குனமோ, அவங்ககிட்டயே போலாம்னு, ஒண்ணா முடிவெடுத்துருக்காங்களாம்… இதுதான் தப்பு செய்தவர்களின் நிலை…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பெண்களை ஈசியா ஏமாத்திடலாம்னு நினைச்சு… குட்டு வெளிப்பட்ட விஷயத்தை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் செங்கத்துல நத்தம்னு முடியுற ஊராட்சியில பெயரோட முடிவுல மணியை கொண்டவரு செக்ரட்ரியாக வேலை செஞ்சி வர்றாரு. இவரு கடந்த 10 வருஷத்துக்கும் மேல இந்த ஊராட்சியிலத்தான் வேலை செஞ்சிகிட்டு வர்றாராம். இதனால, எந்த திட்டத்துல கை வைக்கலாம். யார்கிட்ட எவ்வளவு கமிஷன் பாக்கலாம்னு எல்லாமே அத்துபடியாம். மொத்தத்துல அந்த கிராம ஊராட்சியில இவர் செழிப்பா இருக்காராம். ஜனங்க ஏரியாவுல குடிநீர் பிரச்னை, மின்விளக்கு பிரச்னைனு எதாவது புகார் செஞ்சாலும் கண்டுக்குறதே இல்லையாம். அந்த ஊராட்சியில இருக்குற லேடி பிரசிடெண்ட் சொன்னா அவங்களையும் மதிக்குறதில்லையாம். கிராம ஊராட்சியில நடக்குற வரவு செலவு கணக்குல ஏகப்பட்ட கோல்மால் செய்றாராம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, லேடி பிரசிடெண்ட் கையெழுத்த, இந்த கோல்மால் செக்ரட்ரியே போட்டு பணம் மோசடி செஞ்சிட்டாராம். இப்ப குட்டு வெளிப்பட்டதால, போலி கையெழுத்து போட்ட செகரட்டரி அவஸ்தைல இருக்காராம். இதனால யாரை வைத்து தன் மேல் விசாரணை வராமல் தடுப்பது என்று போலி கணக்கு போட்டு வர்றதா… அவரால பாதிக்கப்பட்டவங்க சொல்றாங்க. அது என்ன போலி கணக்குனு சொன்னா… தப்பு செய்ததில் இருந்து தப்ப முடியாதுனு தெரிஞ்சும் முயற்சிக்கிறதுதான்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஊருக்குதான் உபதேசம்… நமக்கு இல்லை என்பதை இலை கட்சி நிர்வாகி நிரூபிச்சுட்டாருனு சொல்றாங்களே… யாரு அந்த கில்லாடி…’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு, சமீபத்தில் நடந்த தூங்கா நகர் மாநகர் மாவட்ட இலை கூட்டத்தில், தெர்மோகோல் மாஜி மந்திரி பேசினாராம். அப்போது, ‘‘கட்சி தலைமையில் மாற்றம் வேண்டும். இளைஞர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும்’’ என கட்சி தொண்டர்களை சூடேற்றி வீரவசனம் பேசி கைத்தட்டு வாங்கி பேசினாராம். என்னடா இளசுகளுக்கு பதவி கொடுத்தால் வீட்டில் நாம முடங்கிக் கிடக்க வேண்டியது தானா என்று நினைப்பு வந்ததும், நடிகர் வடிவேலு மாதிரி நின்ன இடத்துல இருந்து அப்படியே பிளேட்டை திருப்பி போட்டாராம் தொர்மோகோல் மாஜி மந்திரி. ‘‘தூங்கா நகர மாவட்ட நகரத்துக்கு நீ தான் இறுதிவரை மாவட்டச் செயலாளர்னு சொல்லிட்டு அவங்க, காலமாயிட்டாங்க… அவங்க சொன்னதை இன்னும் லைவ்வா தெர்மோகோல் மந்திரி பிடித்து இருப்பதுதான் வேடிக்கை… ஊருக்குதான் உபதேசமா… உங்களுக்கு கிடையாதா என்று கேட்க நினைத்த இலை கட்சியினர் கூட, தொர்மோகோல், தண்ணீர், ஆவி நினைப்பு வந்தவுடன் கப்சிப் ஆகிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக புலம்பி வரும் தாமரை நிர்வாகிகளின் கூட்டணி வியூகத்தை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Purusha ,wiki ,Yananda ,
× RELATED புருஷாமிருகம்