×

காலதாமதம் இல்லை, கட்டாய வசூல் இல்லை; கண்ணியமாக செயல்படும் பரம்பூர் நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் மகிழ்ச்சி

விராலிமலை: பரம்பூர் நெல் கொள்முதல் நிலையத்தில் காலதாமதம் இல்லாமல், கட்டாய வசூல் செய்யாமல், கண்ணியமாக செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை மகிழ்ச்சியுடன் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் இயங்கி வருகிறது அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பரம்பூர் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மேற்பார்வையில் இயங்கி வரும் இந்த கொள்முதல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா, நெல் விற்க வரும் விவசாயிகளுக்கு டோக்கன், நிலையம் வந்த இரண்டு நாட்களில் எடையிடப்பட்டு நெல் கொள்முதல் செய்தல், உடனடியாக நெல்லுக்கான தொகை என மற்ற கெள்முதல் நிலையங்களுக்கு எடுத்துகாட்டாக செயல்பட்டு வரும் பரம்பூர் நெல் கொள்முதல் நிலையம் அனைத்து விவசாயிகளையும் திரும்பி பார்க்க வைக்கிறது.

விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்மணிகளை தங்கள் விளைச்சல் நிலம் அருகே விற்பனை செய்வதற்கு ஏதுவாக அரசு குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச் சந்தை விலையை விட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இந்த நிலையங்களில் தங்கள் நெல்மணிகளை விற்பனை செய்து பயன் பெறுகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (டி.என்.சி.எஸ்.சி) நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து இந்த பணியை மேற்கொள்கிறது.

குறுவை சாகுபடியில் அறுவடையாகும் நெல் அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடையாகும் நெல் ஜனவரி-மார்ச் மாதங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையம் சுமார் 33 சென்ட் பரப்பளவில் 100 மெட்ரிக் டன் சேமிப்பு வசதி, உலர்த்தும் தளம், பதர் தூற்றும் இயந்திரம் (விண்ணொவிங் மெஷின்), மின்னணு எடை அளவீடு மற்றும் ஈரப்பதமானி, ஆகியவற்றோடு இந்த நிலையங்கள் செயல்படும். மொத்தம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில், பெரும்பான்மையானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்கும் தேவைக்கும் ஏற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் கமிஷனாக பெறப்படுகிறது என்றும் அதை கட்டாயமாக்கி அலுவலர்கள் சிலர் வசூலில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில், பரம்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும் இங்குள்ள ஊழியர்கள் கமிஷன் வாங்குவதில்லை என்பதும் இதன் தனி சிறப்பை காட்டுகிறது. இதுகுறித்து பரம்பூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் பொன்னையா கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையத்திற்கு முதலில் நெல்லை கொண்டு வந்த உடன் டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் வாட்ஸ்அப் குரூப்பில் அவை ஷேர் செய்யப்பட்டு வரிசை அடிப்படையில் இரண்டு நாட்களுக்குப் பின் எடை போட்டு விவசாயிகள் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது.

மேலும் விவசாயிகள் மட்டுமே இங்கு நெல் விற்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அரசின் வழிகாட்டுதலின்படி சரியான முறையில் யாருக்கும் எந்த ஒரு கையூட்டும் வழங்கப்படாமல் செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள 10 கிராம விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். எந்தவித இடைத்தரகர்களின் பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வருவகிறது. நான்கு புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறந்த முறையில் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் கண்காணிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

The post காலதாமதம் இல்லை, கட்டாய வசூல் இல்லை; கண்ணியமாக செயல்படும் பரம்பூர் நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Parambur paddy procurement station ,wiralimalai ,barampur paddy procurement station ,Joy ,
× RELATED 11 இடங்களில் வெற்றி விராலிமலை ஊராட்சி...