×

11 இடங்களில் வெற்றி விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

விராலிமலை, ஜன.3: விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி இடங்களில் இரவு 10மணி வரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 11 இடங்களை திமுக பிடித்து ஒன்றிய குழு தலைவர் பதவியை உறுதிசெய்துள்ளது.
விராலிமலை ஊராட்சிஒன்றியகுழு உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை நேற்று விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலையில் இருந்தது. இரவு 10மணி வரை நடந்த வாக்கு எண்ணிகையில் 15 ஒன்றிய குழு உறுப்பினர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட 3வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, 4வது வார்டு பழனிச்செல்வம், 6வது வார்டு இந்திரா, 10வது வார்டு ரெங்கம்மாள், 11வது வார்டு முத்துலெட்சுமி, 13வது வார்டு லதா, 14வது வார்டு மல்லிகா, 16வது வார்டு காமு, 19வது வார்டு அன்பழகன்,20வது வார்டு தனபால், 21வது வார்டு சத்தியசீலன் ஆகிய 11 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட 1வது வார்டு ஐயப்பன், 5வது வார்டு தேவி, 8வது வார்டு மணிகண்டன் ஆகியோரும், அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டதில் தேமுதிக வேட்பாளர் வசந்தி 7வது வார்டிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு வரை வேட்பாளர்கள் ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெற்றது.

தேர்தல் பாதுகாப்பு பணிகளில் இலுப்பூர் டிஎஸ்பி சிகாமணி தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைவீதி மற்றும் இலுப்பூர் ரோடு, செக்போஸ்ட் பகுதிகளை தடுப்புகளை அமைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்தனர். மேலும் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இது தவிர வேட்பாளர் மற்றும் முகவர்களின் செல்போன் கொண்டு போக அனுமதிக்கவில்லை. இதனால் இவர்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். விராலிமலை ஒன்றியத்தில் மொத்தம் 21வார்டுகளில் 15வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்டு திமுக வேட்பாளர்கள் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து விராலிமலை ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Tags : DMK ,Wiralimalai Panchayat Union Committee ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு