×

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள்: முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்

தேனி, ஏப். 7: தமிழ்நாடு முழுவதும் 21 கோயில்களில் 149. 93 கோடி மதிப்பீட்டில், கட்டுமானப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது . இதில் தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபமும் , ரூ. 1 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்பட உள்ளது. இதேபோல் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் ரூ. 3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. இக்கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பணிகளை துவக்கி வைக்க அடிக்கல் நாட்டினார்.

இதனைத்தொடர்ந்து, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன், திண்டுக்கல் மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல்அலுவலர் சுரேஷ், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரத்தினசபாபதி, வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் ,கோயில் மேலாளர் பாலசுப்பிரமணியன், கணக்கர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேவதானப்பட்டி: ேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் புதிததாக திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசாணைப்படி அறநிலையத்துறை சார்பில் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து தலைமை வகித்தார்.

இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் முன்னிலை வகித்தார். தேவதானப்பட்டி பேரூராட்சி சேர்மன் முருகேஸ்வரி, துணை சேர்மன் நிபந்தன், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ்பாண்டியன், கனகராஜ்பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் ஜெகநாதன், வருவாய் ஆய்வாளர் கனகமணி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் வேலுச்சாமி செய்திருந்தார்.

The post வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள்: முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Veerapandi Gaumariamman ,Temple ,Chief Minister ,Theni ,Tamil Nadu ,Veerapandi Gowmariamman Temple ,
× RELATED உப்புக்கோட்டை விலக்கு அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தீவிரம்