×

மருந்தீஸ்வரர் கோயில் தெப்ப திருவிழா : குளத்தின் படிக்கட்டில் நிற்க தடை

துரைப்பாக்கம்: பழவந்தாங்கலில் 5 பேர் இறந்த சம்பவம் எதிரொலியாக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தெப்ப திருவிழாவில், குளத்தின் படிக்கட்டில் நிற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா கடந்த 27ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 25ம் தேதி இரவு ஊர்க்காவல் எல்லை தெய்வமான  செல்லியம்மன் வீதி உலாவும், 26ம் தேதி இரவு  விநாயகர் வீதி உலாவும் நடைபெற்றது. 5ம் நாள் திருவிழாவான சந்திரசேகர் தொட்டி திருவிழா, எமதர்மருக்கு காட்சி அருளல் நிகழ்ச்சியும், சந்திரசேகர் ரிஷப வாகனத்தில் வீதி உலாவும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் கடந்த 31ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து தியாகராஜர் 5ம் பவனி ராமபிரானுக்கு அருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

6ம் நாள் திருவிழாவில் சந்திரசேகரர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7ம் நாள் திருவிழாவில் சந்திரசேகரர் தேர்த் திருவிழாவில் சந்திரசேகரர் அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று 11ம் நாள் திருவிழாவான தெப்பத் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் தெப்பத்திருவிழாவின் போது பொதுமக்கள் ஏராளமானோர் கோயில் குளத்தின் படிக்கட்டில் நின்று தெப்பத்தை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் பழவந்தாங்கல் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் பங்குனி மாத தீர்த்ததவாரி பூஜை, கோயில் குளத்தில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக 5 பேர் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

இதன் எதிரொலியாக மருந்தீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழாவில் கோயில் குளத்தின் படிக்கட்டில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குளத்தில் இறங்காதவாறு குளத்தைச் சுற்றி நின்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் குளத்தில் பொதுமக்கள் இறங்காதவாறு போலீசார் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். குளத்தை பக்தர்கள் சுற்றி வந்தபோது பாதுகாப்பிற்காக தீயணைப்பு வீரர்கள், பைபர் படகில் குளத்தை சுற்றி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post மருந்தீஸ்வரர் கோயில் தெப்ப திருவிழா : குளத்தின் படிக்கட்டில் நிற்க தடை appeared first on Dinakaran.

Tags : Darshaneeswarar Temple Boat Festival ,Palavantangal ,Thiruvanmiyur Darshaneeswarar Temple raft festival ,
× RELATED பழவந்தாங்கலில் வீட்டின் முன்பு...