×

சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுக்கு பிறகு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்: மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

பெரியபாளையம், : சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயிலில், 100 ஆண்டுக்கு பிறகு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைப்பெற்றது. இதில், பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரி கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. புராணகாலத்தில் ஸ்ரீ ராமபிரானின் மைந்தர்களாகிய லவகுசர்கள் வந்து வணங்கிய சிறப்புடையதாகவும், அகத்திய முனிவர் வந்து பூசித்து இறைவனின் திருக்கல்யாண கோலத்தைத் தரிசித்த பெருமையுடையதாகவும், இந்திரன் தேவருலகை மீட்டெடுக்க வந்து தவஞ்செய்த புண்ணிய திருத்தலமுமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

இங்கு வந்து வணங்கினால் கல்யாணத் தடைகள் நீங்கும், இழந்த பதவிகள் கிடைக்கும், வீடு, நிலம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதங்களில் 12வது மாதமான பங்குனியில் நட்சத்திரங்களில் 12வது உத்திரத்துடன் பௌர்ணமி சேர்ந்து வருவதால் பங்குனி உத்திரம் சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்நாளில்தான் சிவபெருமானுக்கும், பார்வதிதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. புராண வரலாற்றை முன்னிட்டு உலகெங்கும் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி உத்திரத்தன்று கல்யாண உற்சவம் நடைபெறும். இதுபோல் சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயிலும் நடைபெறும்.

சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுகளாக உற்சவம் நடைபெறவில்லை. கோயில் உற்சவத்தை மீண்டும் நடத்திடுமாறு அக்கிராம மக்கள் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவுப்படி, இக்கோயிலில் மீண்டும் உற்சவம் செய்திட முடிவு செய்யப்பட்டது. உற்சவத்தை முன்னிட்டு சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் காலை நல்லெண்ணை, பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், எலுமிச்சை, இளநீர், மாதுளை உள்ளிட்ட 27 வகை பொருட்களால் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக, திருக்கல்யாண உற்சவத்திற்கு தேவையான சீர்வரிசைகள் அருகில் உள்ள ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக கிராம மக்களால் கொண்டுவரப்பட்டு ஸ்ரீஅகத்தீஸ்வருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர், இடப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் சாமி எழுந்தருளி வீதி உலா நடந்தது. இவ்விழாவில், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவாபுரியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுக்கு பிறகு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்: மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Churuvapuri ,Akhatieswarar ,Temple ,Bankuni Uttarakkalyana ,Periyapalayam ,Churuvapura Akhateswarar Temple ,Bankuni Uttara Thirukalyana ,Chiruvapuri Akhateswarar Temple ,
× RELATED பெண் பாலியல் வன்கொடுமை – அர்ச்சகர் பணியிடை நீக்கம்